இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான ஜோஹோ (Zoho)-வின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை கிளப்பும் விதமாக ஒரு சம்பவத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் AI (செயற்கை நுண்ணறிவு) முகவர், அந்நிறுவனத்தின் நிறுவனர் நேரடியாக அறியாமலேயே, நிறுவனத்தை கையகப்படுத்துதல் தொடர்பான ரகசிய தகவல்களை ஸ்ரீதர் வேம்புவுக்கு அனுப்பியதற்காக தானாகவே மன்னிப்புக் கோரி ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. இந்த சம்பவம், முக்கியமான வணிக தொடர்புகளில் ஏஐ முகவர்களை நம்புவதால் ஏற்படும் கடுமையான அபாயங்கள் குறித்து பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு தனது அதிகாரப்பூர்வ லிங்க்ட்இன் பக்கத்தில் இந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். முதலில், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர், தங்கள் நிறுவனத்தை வேறொரு நிறுவனம் கையகப்படுத்துவது தொடர்பான திட்டத்தை முன்வைத்து, பேச்சுவார்த்தையில் உள்ள விலையையும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். அந்த தகவல் மிகவும் ரகசியமானது.

ஆனால், முதல் மின்னஞ்சல் வந்த சில நிமிடங்களில், அந்த நிறுவனரின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து, ஒரு உலாவியில் இயங்கும் ஏஐ முகவர் மூலமாக 2-வது மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், "நான் ரகசியத் தகவலை வெளியிட்டதற்காக மன்னிக்கவும். இது ஏஐ முகவரான என்னுடைய தவறுதான்" என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இந்த வினோத மன்னிப்பு, நிறுவனருக்கே தெரியாமல், ஏஐ தான் செய்த தவறை உணர்ந்து தானாகவே அனுப்பியதை காட்டுகிறது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரகசிய வணிக தொடர்புகளை ஏஐ மூலம் கையாள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு பயனர், "நீங்கள் மன்னிப்பு கேட்பதற்கு முன்பே உங்கள் ஏஐ முகவர் மன்னிப்பு கேட்பது, நிறுவனத்தில் மேற்பார்வை குறைபாடு இருப்பதற்கான சிவப்பு எச்சரிக்கையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், "மின்னஞ்சல்களை கையாள ஏஐயை அனுமதித்தால் இதுதான் நடக்கும். ஏஐ ஆனது வரைவு செய்திகளை எழுத உதவலாம். ஆனால், இறுதி செய்தியை சரிபார்த்து அனுப்புவது மனிதர்களின் பணியாகவே இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு அந்த குறிப்பிட்ட நிறுவனர் அல்லது நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை என்றாலும், இந்த சம்பவம், நிறுவனங்களை இணைத்தல் அல்லது முதலீட்டு பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கியமான நிர்வாக தொடர்புகளில் ஏஐ-க்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏஐ முகவர்கள் பொறுப்பில் இருக்கும்போது, ரகசிய தகவல்கள் கசிவது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையும் பாதிக்கப்படலாம் என்றும் தொழில் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications