இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஐடி சேவை நிறுவனமான ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூகவலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை பெறும். அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி தொடங்க லஞ்சம் கேட்டதாக அண்மையில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மீண்டும் ஒரு ஊழல் புகாரை அவர் முன் வைத்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற இந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு நிகராக உயர்ந்துள்ளன. இதற்கு காரணமே ஊழல் தான் என குற்றம்சாட்டியுள்ளார். ஸ்ரீதர் வேம்பு இந்தியாவில் நிலத்தின் விலை கடுமையாக உயருவதற்கு பிரதான காரணம் அரசியல் ஊழல் பணம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்படுவதுதான் என கூறியுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பாக ஈட்டப்படும் ஊழல் பணம் பெரும்பாலும் நிலங்கள் மற்றும் கட்டிடங்களில் தான் முதலீடு செய்யப்படுகிறது என கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இதனால் நிலத்தின் தேவை செயற்கையாக அதிகரித்து, விலை விண்ணை தொடுகிறது என தன்னுடைய பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல் செய்வதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் என்ற பெயரில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் நமது நாட்டின் நகர்ப்புறங்களில் நிலத்தின் விலை, தனிநபர் ஜிடிபி அடிப்படையில் இருக்க வேண்டிய அளவை விட மிக அதிகமாக உள்ளது, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் நிலத்தின் மதிப்பிற்கும் இடையிலான விகிதம், உலகின் மற்ற எந்த இடத்தையும் விட இந்தியாவில் அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனால் தான் சென்னை , பெங்களூரு போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் நியூயார்க் போன்ற நகரங்களின் நில விலைகளுக்கு இணையாக உள்ளது என கூறியுள்ளார்.
நிலம், வீடு உள்ளிட்டவற்றின் விலை உயர்வு என்பது வெறும் ரியல் எஸ்டேட் பிரச்சனையாக மட்டும் முடிவதில்லை; அது நாட்டின் பிற முக்கியத் துறைகளையும் பாதிக்கிறது என அவர் பட்டியலிட்டுள்ளார். கட்டிடங்கள் கட்ட அனுமதி பெறுவதில் உள்ள ஊழல்கள் கட்டுமானச் செலவை உயர்த்துகின்றன என கூறும் அவர் அந்த செலவு நேரடியாக மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது என்கிறார்.
தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டணங்கள் உயர்வதற்கும், அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் அதிக வாடகையே முக்கியக் காரணம். இதுவும் ஊழலின் ஒரு சங்கிலி தொடர் விளைவும் தான் என்கிறார். ரியல் எஸ்டேட் விலை உயர்வால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வாடகை உயர்வதால், பொதுமக்களுக்கு விற்கப்படும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது என கூறுகிறார்.
இந்தியா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானம் மிகக் குறைவு. இருப்பினும், சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் நிலத்தின் விலை, தனிநபர் வருமானம் பல மடங்கு அதிகமாக உள்ள நியூயார்க் நகரத்திற்கு நிகராக இருப்பது பொருளாதார ரீதியாக சமமற்றது என சுட்டிக்காட்டுக்கிறார்.
ஊழலின் விளைவால் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாகின்றன, இதனால் இளைஞர்கள் கடும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாகின்றனர், இதன் விளைவு இளைஞர்கள் திருமணம் செய்வதை தள்ளிப்போடுகின்றனர், குழந்தைகளை பெற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர் அல்லது மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர் என்கிறார்.
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, வாழ்க்கை செலவு அதிகரித்திருப்பதும் ஒரு முக்கியக் காரணம் என ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டுகிறார். ஊழல் என்பது நமது சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக (Existential threat) மாறியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

