சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை இந்திய ஐடி நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க பொருளாதார நிலை இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியையும் வருவாயையும் பாதித்துள்ளது.
இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் வருமானங்கள் 2025ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த அளவு இல்லாமல் பெரிய அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன . இதற்கிடையே ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையும் எடுக்க தொடங்கிவிட்டன. இதனால் ஐடி நிறுவனங்களுக்கும் ஐடி வேலைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா என விவாதங்கள் எழ தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் ஸோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ஐடி நிறுவனங்களின் சரிவுக்கு அமெரிக்க வரிவிதிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை ஆகிய இரண்டு மட்டுமே காரணம் அல்ல எனக் கூறியிருக்கிறார். ஐடி நிறுவனங்களுக்கு இது ஒரு சுழற்சி அடிப்படையிலான வீழ்ச்சி மட்டுமல்ல இதனை நாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தி மட்டும் பார்க்கக்கூடாது எனக் கூறியிருக்கிறார் .
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையும் ஐடி நிறுவனங்களின் சரிவுக்கு காரணம் கிடையாது ஏற்கனவே இந்திய நிறுவனங்களில் ஒரு பெரிய பிரச்சனை இருந்தது அதுவே தற்போது இந்த சரிவுக்கு காரணம் எனக் கூறியிருக்கிறார். இந்தியாவின் பரந்து விரிந்த இந்த மென்பொருள் துறை என்பது தன்னுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டிலுமே திறமையற்றதாக மாறிவிட்டது என ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
இந்த திறமையின்மைகள் பல தசாப்தங்களாக நீடித்து தற்போது பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது என தெரிவித்திருக்கிறார் . துரதிஷ்டவசமாக இந்தியாவில் இதுபோன்ற பல திறமையின்மைகளை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என கூறி இருக்கும் அவர் நம்முடைய வேலைகளும் இந்த திறமையின்மைகளை சார்ந்து உருவாகி இருக்கின்றன என தெரிவிக்கிறார்.
உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு சென்றிருக்க வேண்டிய திறமைகளை ஐடி துறை எடுத்துக் கொண்டதே இதற்கு காரணம் என ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். நாம் இந்த பிரச்சனையின் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கிறோம் என தன்னுடைய பதிவில் தெரிவித்து இருக்கும் ஸ்ரீதர் வேம்பு என்னுடைய ஆய்வறிக்கையின்படி நான் பார்க்கும்போது கடந்த 30 ஆண்டுகள் அடுத்த 30 ஆண்டுகளுக்கான நல்ல வழிகாட்டியாக இருக்கவில்லை என தெரிவிக்கிறார்.
தற்போது நாம் இதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். நம்முடைய அனுமானங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் புதிய சிந்தனைகளை புகுத்த வேண்டும் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் . இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் 2025ஆம் நிதி ஆண்டுக்கான நான்காவது காலாண்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் ஐடி சேவைகளுக்கான தேவை குறைந்து ஐடி நிறுவனங்களின் வருமானங்களும் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
கூடிய விரைவில் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்பதும் , டிரம்ப் நிர்வாகம் எடுத்திருக்கும் வரி விதிப்பு நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியை தாக்கும் என்றும் ஐடி நிறுவனங்கள் பெரிய அளவு பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 2025-26ஆம் ஆண்டு ஐடி துறைக்கு சவாலான ஆண்டாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications