தமிழ்நாட்டு டெக் துறையில் முன்னணி நிறுவனமான Zoho பிற நிறுவனங்களைப் போல் அல்லாமல், சிறு நகரங்களில் அதிகப்படியான அலுவலகங்களைத் திறந்து அதிகப்படியான கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் பல மாத பணிகளுக்குப் பின்பு புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
இதுகுறித்து Zoho நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவாய் கிராமத்தில் ஒரு புதிய ZOHO கேம்பஸ் திறக்கப்பட்டது. இந்த புதிய கேம்பஸ், என்னுடைய சொந்த ஊரான தென்காசியிலிருந்து 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.

இதன் மூலம், தென் மாவட்டங்களில் மூன்று முக்கிய அலுவலகங்களை Zoho கொண்டுள்ளது: தென்காசியில் உள்ள மத்தளம்பாறை, மதுரையில் உள்ள கப்பலூர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள தருவாய் ஆகிய இடங்களில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மேலும், அடுத்தகட்டமாக கும்பகோணம் பகுதியில் இருக்கும் அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளோம், அதை தொடர்ந்து கோவைக்கு அருகிலுள்ள பல்லடம் பகுதியில் பெரிய அலுவலகத்தை வைத்துள்ளோம். Zoho-விற்கு பல சிறிய சேட்டிலைட் அலுவலகங்களும் உள்ளன, மேலும் நான் சென்னையில் பணியாற்றாமல் மத்தளம்பாறையில் உள்ள சிறிய சேட்டிலைட் அலுவலகத்திலிருந்து பணியாற்றுகிறேன்.
சென்னையில் அதிகப்படியான மக்கள் தொகை, டிராபிக் பிரச்சனை குறித்து பேசுகையில், ZOHO நிர்வாகம் தனது வளர்ச்சி பாதையை கிராமப்புற அலுவலகங்களில் இருந்து இயக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

Zoho-வின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டும் அல்லாமல் கிராமப்புறத்தில் அதுவும் டெக் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும்.
Zoho தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஆந்திராவிலும், இந்தியாவில் பிற முக்கிய மாநிலங்களின் 2ஆம் நிலை, 3ஆம் நிலை கிராமங்களில் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது.
Zoho நிறுவனம் தனது ஒவ்வொரு அலுவலகத்தையும் ஒரு தனித்துவமான அடையாளமாகவே உருவாக்கி வருவது நாம் அறிந்ததே. சென்னையில் உள்ள தலைமை அலுவலகமாகட்டும், தற்போது கட்டப்பட்டு வரும் புதிய சென்னை அலுவலகமாகட்டும் அனைத்தும் தனித்துவமான கட்டிட அமைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளன.
இந்த வரிசையில், தற்போது திருநெல்வேலியில் திறக்கப்பட்டுள்ள புதிய Zoho அலுவலகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு அலுவலகமா அல்லது ஒரு வீடா என்ற குழப்பமே ஏற்படும் வகையில், மிகவும் இயற்கை சூழலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக முதலீட்டை ஈர்க்கும் நகரமாக வளர்ந்து வரும் திருநெல்வேலியில், Zoho தனது புதிய அலுவலகத்தைப் பாரம்பரிய கட்டிடக்கலையைப் பின்பற்றி வடிவமைத்துள்ளது. மரவேலைப்பாடுகள், பாரம்பரிய டிசைன்கள் என அனைத்தும் இயற்கையை ஒன்றியுள்ளது.
உயரமான கட்டிடங்களில் பணிபுரியும் பலருக்கு, இந்த வகையான இயற்கை சூழல் கொண்ட அலுவலகம் நிச்சயமாக புதிய வைப் தரும் என்றால் மிகையில்லை.


Click it and Unblock the Notifications