இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக வளர்ந்து வரும் zoho நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வருபவர். அந்த வகையில் வேலைவாய்ப்புகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகவும், தொழில்நுட்பத்தில் முன்னணியிலும் இருக்கும் சீனாவிலேயே கல்லூரி பட்டதாரிகளால் வேலைவாய்ப்பை பெற முடியவில்லை என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கவலை தெரிவித்துள்ளார். ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் காரணமாக நிலையான சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, சீனா உலகின் தொழிற்சாலையாக திகழ்கிறது; பல்வேறு துறைகளில் அபாரமான தொழில்நுட்ப திறன்களை கொண்டுள்ளது; மேலும் 1.2 டிரில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக உபரியையும் ஈட்டுகிறது. இருந்தாலும் அந்த நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் திணறி வருகிறது என கூறியுள்ளார்.
சீனாவில் வேலை தேடும் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட நபர்களில் சுமார் 70 சதவீதத்தினர் பல்கலைக்கழக பட்டதாரிகள் ஆவர். செப்டம்பர் நிலவரப்படி, மாணவர்களை தவிர்த்து நகர்ப்புறங்களில் 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 18 சதவீதமாக உள்ளது. அதாவது வேலைவாய்ப்பின்மை அதுவும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனை குறிப்பிட்டு ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இன்றைய நவீன கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகள், இளைஞர்களை படிப்பை முடித்தவுடன் ஒரு நிலையான சம்பளம் தரும் வேலைக்கு செல்வதற்காகவே தயார்படுத்துகின்றன, ஆனால் அந்த மாதிரியான வேலைகளே அதிகரிக்கவில்லை என கூறியுள்ளார். அதாவது நிலையான சம்பளம் தரும் வேலைகளுக்கு ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் கடுமையான அச்சுறுத்தல் வந்துள்ளது என எச்சரித்துள்ளார்.
இந்த சிக்கல் எதிர்காலத்தில் மேலும் மோசமடையுமே தவிர குறையாது திட்டவட்டமாக கூறும் ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்கள் மட்டுமே வழக்கமான சம்பள வேலைகளை வழங்கும் என்ற பழைய பொருளாதார மாதிரியை அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பெரிய அளவில் தொழில்முனைவு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே இதற்கான ஒரே தீர்வு என்கிறார்.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது இந்த சுயதொழில் முறைதான். பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பெருநிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் நிலையான சம்பளம் தரும் வேலைகள் இனி உதவாது. நாம் அந்த மாடலில் இருந்து மெல்ல விலகி செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படி, நல்ல வேலைக்கு செல், உன் பெற்றோரை விட பணக்காரனாக மாறு என்பதற்கு எல்லாம் இனி காலம் இல்லை, நம் நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் இதை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கூறுகிறார்.


Click it and Unblock the Notifications

