30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்து பரிமாற்றம் நடைபெறும் போது Specified Financial Transaction Statement (SSFT) எனப்படும் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைக்கான அறிக்கையை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரித்துறை இந்த பரிமாற்றம் குறித்த தகவல்களை பெறும்.
கர்நாடக மாநில பத்திரப்பதிவுத்துறை இது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதன்படி சார்பதிவாளர்கள் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட சொத்துக்கள் மீதான பரிமாற்றங்கள் நடைபெறும் போது குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கையை பெறுவது கட்டாயம் என டைம்ஸ் ஆப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 285BA(1)இன் படி வருமான வரித்துறையிடம் தனிநபர்களும், பத்திரப்பதிவு துறையும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட சொத்து பரிவர்த்தனைகள் குறித்த SSFTஐ தாக்கல் செய்வது கட்டாயம். ஆனால் கர்நாடகாவில் பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களும் இந்த அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் தவிர்ப்பதாக வருமான வரி துறை புகார் அனுப்பியுள்ளது.
இதனை அடுத்து தான் கர்நாடக மாநில பத்திரப்பதிவுத்துறை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. பத்திரப்பதிவு துறை மேலாளர் தயானந்தா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் "அனைத்து சார் பதிவாளர்களும் சொத்து விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவரின் முகவரி, பான் எண், பதிவு தேதி, சொத்து பரிமாற்றத்தின் மதிப்பு, குறிப்பிட்ட அந்த சொத்து விவரங்கள், எந்த வகையில் பணம் செலுத்தப்பட்டது, இருதரப்பு ஆதார் விவரங்கள், படிவம் 60க்கான ரசீது, பிறந்த தேதி, தகவல் தொடர்பு விவரங்கள் மற்றும் மின்னஞ்சல் ஆகிய அனைத்தையும் கட்டாயம் சேகரிக்க வேண்டும்.
சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் என இரண்டு தரப்புமே இந்த தகவல்களை சரி பார்த்து கையெழுத்திட வேண்டும். இந்த குறிப்பிட்ட SSFT படிவமானது ஸ்கேன் செய்யப்பட்டு சொத்து பரிவர்த்தனைக்கான ஆவணங்களோடு இணைக்கப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த SSFT படிவத்தை பெறும் வரை சார் பதிவாளர்கள் அந்த சொத்து பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை உரிய நபரிடம் ஒப்படைக்க கூடாது என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
எனவே கர்நாடகாவில் இனி 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து பரிமாற்றம் நடைபெற்றால் SSFT படிவத்தை தாக்கல் செய்வது கட்டாயமாகியுள்ளது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் சொத்து பரிமாற்றங்கள் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றிற்காக காவேரி 2.0 என்ற திட்டத்தின் கீழ் சொத்தினை வாங்குபவர் மற்றும் விற்பவர்கள் தங்களுக்கான ஆவணங்களை ஆன்லைனிலேயே பதிவேற்றம் செய்ய முடியும்.
சார் பதிவாளர்கள் இந்த SSFT படிவத்தையும் ஆன்லைனிலேயே பதிவேற்றம் செய்வதற்கான வசதியை கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். நேரடியாக தாங்களே இந்த விவரங்களை சேகரிக்கும் போது தங்களுக்கு வேலை பளு அதிகமாகும் என கூறியுள்ளனர்.
வருமானவரி சட்டத்தின் படி ஒரு தனி நபர் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்பு கொண்ட எந்த ஒரு அசையா சொத்தினை வாங்கும் போது அல்லது விற்பனை செய்யும் போது வருமானவரித்துறை இடம் தெரிவிக்க கட்டாயம். தனிநபர்களும் சரி சார்பதிவாளர் அலுவலகங்களும் சரி இந்த தகவல்களை வருமானவரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications