ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குழுமம், சென்னையின் மையப்பகுதியில் ஹாடோஸ் சாலையில் அமைந்துள்ள தனது முக்கியமான ரியல் எஸ்டேட் சொத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 5.78 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், தற்போது சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தற்போது இக்குழுமத்தின் குளோபல் சர்வீசஸ் இந்தியா (StanChart GBS) செயல்படும் இடமாக உள்ளது. இந்த விற்பனை செயல்முறையை நிர்வகிக்கச் சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனமான CBRE நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பிரபல ஐடி சேவை நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தின் துரைப்பாக்கம் அலுவலகம் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தலைமையிடமாகச் செயல்பட்டு வந்த நிலையில், இதை விற்பனை செய்த முடிவு செய்துள்ளது. Cognizant நிறுவனத்தின் இரண்டு இணை நிறுவனர்களான லட்சுமி நாராயணன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் இந்த அலுவலகத்திலிருந்து தான் காக்னிசென்ட் நிறுவனத்தை Nasdaq-ல் மணி அடித்துத் துவங்கி வைத்தனர்.
இதன் வழியில் தற்போது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குழுமம் ஹாடோஸ் சாலை சொத்தை விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனைக்குப் பின்பு StanChart GBS தனது சென்னை செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
அதாவது 2025 ஆம் ஆண்டுக்குள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குழுமம், சென்னையில் நான்கு வெவ்வேறு இடங்களில் தற்போது பணிபுரியும் 16,000 ஊழியர்களையும் DLF டவுன்டவுன் வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 7.40 லட்சம் சதுர அடி ஒருங்கிணைந்த அலுவலகத்திற்கு மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே ஹாடோஸ் சாலை இடம் சுமார் 24 ஆண்டுகளாக StanChart GBS இன் செயல்பாட்டுத் தளமாக இருந்ததை தற்போது விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சொத்து நீண்ட காலமாக விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குழுமம் ஏற்கனவே கேளம்பாக்கத்தில் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலப்பகுதியை ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளரான நியூடெக் குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளது. ஹாடோஸ் சாலை சொத்து விற்பனை ஒரு மைல்கல் பரிவர்த்தனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் சென்னை நகரில் முக்கிய பகுதியில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் தற்போது போட்டி மிகுந்த சந்தையில் கிடைப்பது அரிது. சென்னையில், குறிப்பாக ஹாடோஸ் சாலை போன்ற முக்கிய இடங்களில் நிலத்தின் மதிப்பு ஒரு கிரவுண்டுக்கு 8 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications