அதானி குழுமத்தின் சிமெண்ட் பிரிவான அம்புஜா சிமெண்ட், வடகிழக்கு பிராந்தியத்தின் சிமெண்ட் சந்தையில் முக்கிய நிறுவனமான ஸ்டார் சிமெண்டை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அம்புஜா சிமெண்ட் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான பின்பு நடந்தது வேறு.
அம்புஜா சிமெண்ட், ஸ்டார் சிமெண்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் மற்றும் நன்மைகளை மதிப்பிடுவதற்காக அதானி குழுமம், EY குழுமத்தை ஆலோசனை நிறுவனமாக நியமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானதால், இதை அனைத்து தரப்பினரும் நம்ப துவங்கினர்.

ஆனால் அதானி சிமெண்ட் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தது. இதை தொடர்ந்து ஸ்டார் சிமெண்ட் நிறுவனம், அதானி குழுமத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க இது வதந்தி என பகிரங்கமாக அறிவித்தது.
இன்றைய வர்த்தகத்தில் காலை முதல் சரிவிலேயே இருக்கும் அம்புஜா சிமெண்ட் வர்த்தகம் முடியும் போது 0.31 சதவீதம் சரிந்து 564.80 ரூபாயாக உள்ளது. மணிகண்ட்ரோல் வெளியிட்ட செய்தியால் மதிய வர்த்தகத்தில் சிறிய அளவிலான உயர்வு காணப்பட்டாலும், மீண்டும் சரிவில் முடிந்தது.
வடகிழக்கு இந்தியாவில், அல்ட்ராடெக் சிமெண்ட் தற்போது ஆசாமில் 1.2 மில்லியன் டன் திறன் கொண்ட கிரீன்ஃபீல்டு அரைக்கும் யூனிட்டை கட்டமைத்து வருகிறது, இது 2027 நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதேபோல், ஜேகே லக்ஷ்மி சிமெண்ட் ஆசாமில் 1 மில்லியன் டன் திறன் கொண்ட கிளின்கரைசேஷன் யூனிட்டையும் 1.5 மில்லியன் டன் திறன் கொண்ட சிமெண்ட் அரைக்கும் யூனிட்டையும் அமைக்க உள்ளது.

வடகிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்டார் சிமெண்ட், விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, இதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய திறன் 7.7 மில்லியன் டன் ஆகும், இதில் மேகாலயாவில் ஒரு ஒருங்கிணைந்த தொழிற்சாலை மற்றும் பல அரைக்கும் யூனிட்கள் உள்ளன. நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் சஜ்ஜன் பஜன்கா மற்றும் பிரேம் குமார் பஜன்கா ஆகியோர் நிறுவனத்தில் முறையே 11.85% மற்றும் 10.20% பங்குகளை வைத்துள்ளனர்.
இந்திய சிமெண்ட் துறை ஒருங்கிணைப்புக்கு உள்ளாகி வருவதால், இதுபோன்ற முக்கிய கையகப்படுத்துதல்கள், இத்துறையில் போட்டியை அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications