பொதுமக்கள் பலரும் தற்போது மருத்துவ காப்பீடு பாலிசி எடுக்கத் தொடங்கி விட்டனர். எதிர்காலத்தில் பெரிய மருத்துவ செலவு ஏதாவது வந்தால் கைகொடுக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். கடந்த நிதியாண்டில் மருத்துவ காப்பீட்டு பிரீமியம் வசூல் ரூ.90,667 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் இது ரூ.1 லட்சம் கோடியை எளிதாக கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு பிரிவில் காணப்படும் வலுவான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இன்ஸூரன்ஸ் வணிகத்தில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்கள் தனி மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன.

அந்த வகையில் இன்ஸ்யூரன்ஸ் துறையில் பெரும் அனுபவம் கொண்டவரும், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனருமான வி.ஜெகன்நாதன் மருத்துவ காப்பீட்டு பிரிவில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக டி.வி.எஸ். குழுமத்தை பங்குதாரராக சேர்த்து புதிய நிறுவனத்தை தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். இன்ஸ்யூரன்ஸ் வணிகம், டி.வி.எஸ். குழுமத்துக்கு புதிய தளம் அல்ல, ஏற்கனவே அந்த குழுமத்துக்கு இன்ஸ்யூரன்ஸ் வர்த்தக வரலாறு உள்ளது.
தமிழகத்தை தளமாக கொண்ட டி.வி.எஸ். குழுமம், காப்பீட்டு துறை தேசியமயமாக்கலுக்கு முன் மெட்ராஸ் மோட்டார் அண்டு ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் என்ற காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வந்தது. காப்பீட்டு துறை தேசியமயமாக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
தாராளமயமாக்கலுக்கு பிறகு, டி.வி.எஸ். குழுமம் மீண்டும் இன்ஸ்யூரன்ஸ் வர்த்தகத்தில் களம் இறங்கியது. சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ராயல் சுந்தரம் இன்ஸ்யூரன்ஸ் என்ற பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கியது.
யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஜெகநாதன். அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் ஸ்டார் ஹெல்த் அண்டு அலைட் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.
தற்போது ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய 79 வயதான தொழிலதிபர் வி.ஜெகநாதன், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பிரகாஷ் உடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு துறையில் புதிய நிறுவனத்தை தொடங்க முடிவு செய்துள்ளார்.
தற்போது டிவிஎஸ் குழுமத்தையும் பங்குதாரராக சேர்த்து அந்த நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக டி.வி.எஸ். குழுமத்துடன் பங்கு பங்கேற்பு தொடர்பாக அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications