காஃபி என்றாலே ஸ்டார்பக்ஸ் என்ற அளவுக்கு உலகம் முழுவதும் பிரபலமான அமெரிக்க காஃபி பிராண்ட், தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் தாண்டி சேலத்தில் தனது புதிய கடையைத் திறக்க உள்ளது.
இது காஃபி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கப்போகிறது. சென்னை, கோவைக்கு அடுத்து, தமிழ்நாட்டின் சேலம் நகரில் 30ம் தேதி முதல் ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட இருக்கிறது. இது தமிழ்நாட்டின் கஃபே கலாச்சாரத்தில் ஒரு புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார்பக்ஸ் கடை 30ம் தேதி முதல் சாரதா கல்லூரி சாலை, ஃபேர்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள கிரீன் பார்க் (DNC) மாலில் இந்த புதிய ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட உள்ளது.
இந்த கடை திறப்பை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு அறிமுக சேவையாக "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற சிறப்பான ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இலவச ஆஃபர் ஜூன் 30ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த இரண்டு நாளில் இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் விருப்பமான ஸ்டார்பக்ஸ் காஃபி-ஐ ஆர்டர் செய்து, இலவசமாக மற்றொரு காஃபி-ஐ பெறலாம். ஸ்டார்பக்ஸ் கடை காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
சேலம் தேர்வு செய்யப்பட்டதன் காரணங்கள்: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபலமான காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து சேலத்தைத் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழலாம். இதற்குப் பின்வரும் காரணங்கள் முக்கியமானதாக இருக்கலாம்.

வளர்ந்து வரும் நகரம்: சேலம், தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், நகரமயமாக்கல் காரணமாக, இளைஞர்கள் மற்றும் இளம் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த இளைய தலைமுறை, மேற்கத்தியக் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், பிரபலமான பிராண்டுகளை விரும்புபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களைக் குறிவைத்து தனது சந்தையை விரிவுபடுத்தவே ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சேலத்தைத் தேர்வு செய்திருக்கலாம்.
இதேபோல் கோயம்புத்தூர் அடுத்ததாக அதிகப்படியாகக் கல்லூரிகள் இருக்கும் பகுதியாகவும் சேலம் இருக்கும் காரணத்தால் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் ஸ்டார்பக்ஸ் இலக்கிற்குச் சேலம் சரியான தேர்வாக இருந்திருக்கும்.
காஃபி கலாச்சாரம் வளர்ச்சி: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் காஃபி கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வேலை, பொழுதுபோக்கு மற்றும் சந்திப்புக்கான இடமாக இளைஞர்கள் காஃபி கஃபே-க்களை தேர்வு செய்து வருவதுதான். இந்த வளர்ந்து வரும் காஃபி கலாச்சாரத்தை லாபமாக மாற்றவே ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சேலத்தைத் தேர்வு செய்திருக்கலாம்.
கோவை - சேலம் இணைப்பு: சென்னையை அடுத்து, தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள் கோவை மற்றும் சேலம். இதேபோலே சென்னை- கோவை இரு நகரங்களையும் இணைக்கும் வழித்தடத்தில் சேலம் அமைந்துள்ளது. இதன் காரணமாக, வணிக ரீதியாகவும் சேலம் ஒரு முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.
ஸ்டார்பக்ஸ் என்ட்ரி: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் சேலம் போன்ற நகரத்திற்கு வருவது பல விஷயங்களைக் குறிக்கிறது.
வளர்ந்து வரும் சந்தை: சேலம் போன்ற நகரங்களுக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வருவது, தமிழ்நாட்டின் Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் காபி சந்தை வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
பிரபலமான காபி பிராண்டுகள் நுழைவது, ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதற்கான அறிகுறி என்றும் பார்க்கப்படுகிறது. ஸ்டார்பக்ஸ் வருகையை தொடர்ந்து நாட்டின் பிற காஃபி பிராண்டுகளும் சேலத்திற்கு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications