ஸ்டார்பக்ஸ் சிஇஓவாக இருந்த இந்தியரான லக்ஷ்மன் நரசிம்மன் நீக்கப்பட்ட பின்பு சிப்போட்லே சிஇஓ ஆக இருந்த பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டார். இவர் வந்த பின்பு லாபத்தையும், வர்த்தகத்தையும் அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய போது, இந்திய வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்தது.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இப்படியிருக்கும் போது இந்தியாவில் வர்த்தகம் மோசமாக இருப்பதாகவும், நஷ்டத்தில் இயங்குவதாலும் இந்தியச் சந்தையிலிருந்து ஸ்டார்பக்ஸ் வெளியேறுகிறது என்ற வதந்திகள் சமீபத்தில் பரவி வருகின்றன.

இது காஃபி ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது, என்னதான் ஒரு காஃபி 400 முதல் 1000 ரூபாய் விற்பனை செய்யப்பட்டாலும் இளம் தலைமுறையினர் முதல் கார்ப்ரேட் ஊழியர்கள் வரையில் ஸ்டார்பக்ஸ் ஃபேன் ஆகவே உள்ளனர். இந்த நிலையில் ஸ்டார்பக்ஸின் இந்திய பார்ட்னரான டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் இந்த வதந்திகளை முழுமையாக மறுத்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் அதிகப்படியான இயக்கச் செலவுகள், குறைந்த லாபம் மற்றும் இந்திய நுகர்வோர் விருப்பங்களுடன் பொருந்தாத தன்மை போன்ற காரணங்களால் ஸ்டார்பக்ஸ் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்ததாகத் தகவல் வெளியாகின. இதேவேளையில் ஸ்டார்பக்ல் கடைகளின் வாடகை செலவுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அதிகம் நம்பி இயங்கும் கட்டமைப்பு போன்றவை இந்திய சந்தையில் ஸ்டார்பக்ஸ் பிராண்ட் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் எனவும் தகவல் வெளியானது.
ஆனால் டாடா குழுமம் அதைக் கடுமையாக மறுத்துள்ளது,இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் தொடர்ந்து தனது கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடி வருகிறது. இதேவேளையில் ஆன்லைன் விற்பனையும் மேம்படுத்தும் பணிகளைச் செய்து வருகிறது.
டாடா ஸ்டார்பக்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் 12% அதிகரித்து ரூ.1,218 கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ. 25 கோடியிலிருந்து ரூ. 80 கோடியாக அதிகரித்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
வருவாய் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், அதிகரித்து வரும் இழப்புகள் நிறுவனம் லாபம் ஈட்ட முடியாத அளவுக்கு இருப்பது தான் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் டாடா ஸ்டார்பக்ஸின் வருவாய் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்பக்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறும் என்ற வதந்திகள், இந்திய மக்கள் டீ, பில்டர் காஃபி, உள்ளூர் கஃபேக்களை அதிகம் விரும்பும் காரணத்தால் அதிக விலை கொண்ட ஸ்டார்ட்பக்ஸ் காஃபி குடிக்கும் விருப்பம் மக்கள் மத்தியில் தொடர்ந்து குறைந்து வருவதாக கருத்து நிலவுகிறது. இதனால் ஸ்டார்ப்க்ஸ் இந்திய மக்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மெனுவை தயாரித்து கூடிய விரைவில் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications