சென்னை: உலகப் புகழ்பெற்ற காபி ஷாப் பிராண்டான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த லக்ஷ்மன் நரசிம்மன் திடீரென பதவி விலகியுள்ள செய்தி நேற்று இரவு முழுவதும் உலகளவில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் லக்ஷ்மன் நரசிம்மன் இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது மட்டும் அல்லாமல், அமெரிக்க நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகள் பதவி விலகும் எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது தான்.
பொதுவாக நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது கேள்விப்பட்ட ஒன்று, ஆனால் தற்போது அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் சிஇஓ-க்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

ரசல் 3000 குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைக் கண்காணிக்கும் ஆய்வு நிறுவனமான எக்ஸ்சேஞ்ச்.காம் வெளியிட்ட தகவல்களின்படி, இந்த ஆண்டு இதுவரை 191 தலைமை நிர்வாக அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். இதில், 74 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.
2017 ஆம் ஆண்டு முதல் எக்ஸ்சேஞ்ச்.காம் தளம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பதவி மாற்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தும், கண்காணித்தும் வருகிறது. இந்த ஆண்டு தான் அதிகப்படியான தலைமை நிர்வாக அதிகாரிகள் பதவி விலகியது என எக்ஸ்சேஞ்ச்.காம் தளம் கூறியுள்ளது.
லக்ஷ்மன் நரசிம்மன் பதவி விலகியதற்கான காரணத்தை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும், எக்ஸ்சேஞ்ச்.காம் அவரது பெயரையும் தங்களது பட்டியலில் சேர்த்துள்ளது. "வேகமாக மாறிவரும் சந்தை சூழலில், நல்ல செயல்பாட்டைக் காட்டாத தலைமை நிர்வாக அதிகாரிகள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்" என்று எக்ஸ்சேஞ்ச்.காம் நிறுவனர் டேனியல் ஷாபர் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
கடந்த இரண்டு காலாண்டுகளாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது. மேலும், புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவதற்கு முன்பே நிறுவனத்தின் பங்குகள் 20% வீழ்ச்சியடைந்திருந்தன.
இதுகுறித்து முதலீட்டு நிறுவனங்களான எலியட் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் ஸ்டார்போர்ட் வேல்யூ ஆகியவை ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவைக் கடுமையாக விமர்சனம் செய்து நெருக்கடிக்கு உள்ளாக்கி வந்தன. மேலும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஹாவர்டு ஷூல்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பகிரங்கமாகவும், தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வந்தார்.


Click it and Unblock the Notifications