அமெரிக்கா: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரைன் நிக்கோலின் ஊதியம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவை சேர்ந்த லட்சுமணன் நரசிம்மன் கடந்த 17 மாதங்களாக ஸ்டார்பக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக பிரைன் நிக்கோல் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமணன் நரசிம்மன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த காலத்தில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 23 சதவீதம் சரிவடைந்ததோடு சந்தை மூலதனம் 32 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இந்நிலையில் தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அவரை நீக்கிவிட்டு பிரைனுக்கு இந்த வாய்ப்பை தந்துள்ளது. அவருக்கு மொத்தமாக 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 948 கோடி ரூபாய் ஆகும்.

இதில் 10 மில்லியன் டாலர்கள் அவர் இந்த வேலையை ஏற்றுக்கொள்வதற்கான போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது. 75 மில்லியன் டாலர்கள் ஈக்விட்டி பங்காக வழங்கப்படுகிறது. அது மட்டும் இன்றி ஆண்டு சம்பளம் 1.6 மில்லியன் டாலர்கள். இத்துடன் ஆண்டு போனஸ் மற்றும் பிற கொடுப்பனவுகள் என மொத்தமாக இவருக்கு 113 மில்லியன் டாலர்கள் ஊதியமாக கிடைக்கிறது. மேலும் இவர் தன்னுடைய இருப்பிடத்திலிருந்து நிறுவனத்தை கவனித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரைன் நிக்கோல் தற்போது இருக்கும் இடத்திலிருந்து நிறுவனத்தை கவனித்துக் கொள்ளலாம் என்றும் இதற்காக அவர் நிறுவன தலைமையிடம் அமைந்துள்ள சீட்டல் பகுதிக்கு குடிபெயர வேண்டிய தேவை இல்லை என்றும் ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இவர் சீட்டலுக்கு பயணம் செய்யலாம் என அவருக்கு வழங்கப்பட்ட ஆஃபர் லெட்டரில் கூறப்பட்டுள்ளது.
பிரைன் நிக்கோல் சீட்டலுக்கு பணி நிமித்தமாக வரும் போது அவருக்கு தேவையான தங்குமிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஸ்டார்பக்ஸே செய்து கொடுக்கும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விமானத்தையும் இவர் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நிறுவன விமானத்தை பயன்படுத்தி வீடு மற்றும் நிறுவன தலைமையகம் மற்றும் சீட்டலில் உள்ள பிரதான அலுவலகம் ஆகியவற்றிற்கு இவர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”இந்த துறையில் தான் ஒரு மிகச்சிறந்த தலைவர் என்பதை பிரைன் நிக்கோல் நிரூபித்துள்ளார், எனவே தான் அவருக்கு நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை ஊதியமாக வழங்குகிறோம். நீண்ட கால அடிப்படையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இவர் உறுதுணையாக இருப்பார்” என தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications