டெல்லி: எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இணைய சேவை வழங்குவதற்கான அனுமதியை பெற்று இருக்கிறது. இந்தியாவில் தற்போது தொலைதொடர்பு இணைய சேவை பிரிவுகளில் தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில் ஸ்டார்லிங்க் அதற்கு போட்டியாக வந்திருக்கிறது.
ஸ்டார்லிங்க் நிறுவன வருகை இந்திய சந்தையில் அரசு நிறுவனமான பிஎஸ் என் எல் மற்றும் தனியார் நிறுவனங்களான ஜியோ ஏர்டெல் உள்ளிட்டவற்றுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என சொல்லப்படுகிறது . இந்த சூழலில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் 20 லட்சம் இணைப்புகளை மட்டுமே வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவன கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வருகை பிஎஸ்என்எல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கும் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் போட்டியாக அமையுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் 20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இணைப்புகளை வழங்க முடியும் என தெரிவித்திருக்கிறார். 200 Mbps வேகத்தில் மட்டுமே இணைய சேவை வழங்க முடியும் என கூறினார்.
இதனால் அரசு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது என குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் தற்போது இணைய சேவை என்பது டவர்கள் மூலம் நமக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸ்டார்லிங்க் நேரடியாக சேட்டிலைட் வாயிலாகவே இணைய சேவையை வழங்குகிறது. இதனால் மூலை முடுக்கெங்கும் இணைய வசதி செல்லும் மேலும் வேகமாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் முதன் முதலில் சேட்டிலைட் அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனமாக ஸ்டார்லிங்க் இருக்கிறது . ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இலக்கு இந்தியாவில் இணைய வசதி இதுவரை சென்று சேராத கிராமப்புற மற்றும் மலைப்பிரதேச பகுதிகளாக இருக்கும் என கூறப்படுகிறது . பிஎஸ்என்எல் இங்கு தான் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எனவே ஸ்டார்லிங்க் சேவை இந்நிறுவனத்தை பாதிக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனால் அவ்வாறு பாதிப்பு இருக்காது என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஸ்டார்லிங் போன்ற சேட்டிலைட் அடிப்படையிலான இணைய சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களில் மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யும் என்பதால் மக்கள் அத்தனை எளிதாக பிஎஸ்என்எல் உள்ளிட்டவற்றை விடுத்து அதற்கு சென்று விட மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்து இருக்கும் அவர் பிஎஸ்என்எல் தற்போதைக்கு 4g சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications