300 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க்-கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் வாயிலான அதிவேக இண்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்கை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பான இறுதி முடிவைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தான் எடுக்கும் என மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா நவம்பர் 12 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
ஜோதிர் ஆதித்யா சிந்தியா செய்தியாளர்களிடம் பேசும்போது டிராய் பரிந்துரைகளைப் பொறுத்து தான் ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியாவில் சேவை அளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக TRAI அமைப்பு தற்போது நடத்தி வரும் ஆலோசனை செயல்முறையின் முடிவுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவைகளை வழங்க ஸ்டார்லிங்கின் விண்ணப்பத்தின் நிலை குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தபோது இந்த விபரம் வெளியானது.
சமீபத்தில், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் ஒரு நிர்வாகி, TRAI நடத்திய பொது கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எலான் மஸ்க் நிறுவனமான ஸ்டார்லிங்கைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். இதுதான் TRAI அமைப்பு சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முக்கிய காரணமாக இருந்தது
TRAI ஆலோசனை செயல்முறையை முடித்து பரிந்துரைகளை வழங்கிய பின்னர், ஸ்டார்லிங்கிற்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும் தகுதி கிடைக்கும். இருப்பினும், அரசு அனைத்து ஒழுங்குமுறை தேவைகளையும் பூர்த்தி செய்து, உள்துறை அமைச்சகம் எழுப்பிய பாதுகாப்பு அச்சங்களைக் களையும் வகையில் ஸ்டார்லிங்க் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்தியாவில் பார்தி குழுமத்தின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் SES கூட்டு நிறுவனமான ஜியோ சேட்டலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய இரண்டு செயற்கைக்கோள் இண்டர்நெட் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் மற்றும் அதன் முக்கிய போட்டியாளரான ஒன்வெப் ஆகியவற்றுக்கு இந்தியாவில் சேவை அளிக்க உரிமம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு முக்கிய காரணம் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதிகள் தான்.
இந்தியாவில் செயற்கைக்கோள் இண்டர்நெட் சேவைகள் வணிக நோக்கங்களுக்காகவோ அல்லது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதிகளில் அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications