சாதித்து காட்ட வயது ஒரு தடையே இல்லை. அப்படிதான் 60 வயதான மூதாட்டி ஒருவர் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி இருந்தால் போதும்.. செய்யும் சிறு விஷயம் கூட பெரிய வெற்றியை பெற்று தரும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். வெறும் 20 ரூபாய்க்கு டிபன் விற்கத் தொடங்கி.. இன்று ரூ.2.5 கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பி இருக்கிறார். அவர் அப்படி என்ன செய்கிறார்? எப்படி இவ்வளவு சம்பாதிக்கிறார்? என்ற விவரங்களை பார்ப்போம்
65 வயதில் தொடங்கிய பிசினஸ்: பொதுவாக 60 வயதைக் கடந்து விட்டாலே வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். ஆனால் 65 வயதில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி.. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். பாட்னாவில் வெறும் 20 ரூபாய்க்கு வீட்டு முறையில் சமைக்கப்படும் உணவை விற்பனை செய்ய ஆரம்பித்தார். அவருடைய வணிகத்துக்கு தேவ்னி தேவி டிபன் சர்வீஸ் என்று பெயர் வைத்தார். வீட்டு சாப்பாடு என்பதால் விரைவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு இருக்கும் பிரச்சனையைப் போலவே இவருக்கும் இருந்தது. ஆனால் சுவை, தரம் மற்றும் நியாயமான விலை ஆகிய மூன்றிலும் எந்த சமரசமும் செய்யாமல் தினமும் உணவை சமைத்து விற்பனை செய்து வந்தார். இவர் தொழில் தொடங்கிய போது சொந்த பந்தங்களே இவரை கேலி செய்தனர். சிலர் விமர்சித்து பேசினர். வீட்டில் இருந்தவர்களும் பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை. இவருடைய கணவர் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை பேசவில்லை.
ஆனால் இது எதையுமே பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் உணவு விலையை மட்டும் அவர் அதிகரிக்கவில்லை. 20 ரூபாய்க்கு உணவு வழங்கி வந்தார். பின்னர் 2022-ஆம் ஆண்டில் தனது மூத்த மகன் சொன்ன ஆலோசனையை கேட்டு ஆன்லைன் வணிகத்தில் நுழைந்தார்.
ஆன்லைன் பிசினஸுக்கு "அம்மா கிச்சன்" என்று பெயர் வைத்தார். இந்த ஒரு ஐடியா தான் அவருடைய தொழிலுக்கு அடித்தளமாக அமைந்தது. ஆரம்பத்தில் இவரின் மூத்த மகனும் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து தன் தாயாரின் தொழிலை கவனித்துக் கொள்ள தொடங்கினார்.
பார்சல் சர்வீஸ் மட்டும் வழங்கி வந்த இவருடைய வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒரு உணவகத்தை திறந்தார். அதில் வியாபாரம் சக்கை போடு போடவே பாட்னாவிலேயே மீண்டும் ஒரு உணவகத்தை திறந்தார். இன்று இவருக்கு சொந்தமாக 2 உணவகங்கள் இயங்கி வருகின்றன. 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். நாளொன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதன் மூலம் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.
யாருமே உதவிக்கு வரவில்லை என்று நினைத்து பாதியிலேயே தன் தொழிலை விட்டு இருந்தால்.. இன்று இவ்வளவு பெரிய உச்சத்தை அவர் எட்டி இருக்க மாட்டார். இன்றைய இளைய தலைமுறையினருக்கும் இது பொருந்தும். சிலர் தோல்வி பயத்தினால் தொடங்கும் தொழிலையும் பாதியில் விட்டு விடுகின்றனர். கண்சிஸ்டெண்சி இருந்தால் இந்த தொழிலும் ஜெயித்து விடலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications
