சென்னை: இந்தியாவில் இப்போது பணிநீக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நம்மை ஆளத் தொடங்கியுள்ளதால் பல IT தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைக் குறைத்து வருகின்றனர். 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள், நிதி தட்டுப்பாடு காரணமாக, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. அதுமட்டுமின்றி நிறுவனங்கள் தற்போது கவனமாக ஊழியர்களை பணிக்கு எடுத்துக்கொள்வதோடு, லாபத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
குறைந்த பணிநீக்கங்கள்: லான்ங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் தகவல்படி, 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 21,000 ஊழியர்களும், அதே ஆண்டின் அடுத்த 6 மாதங்களில் சுமார் 16,000 ஊழியர்களும் பணி இழந்தனர். இதைக் கொண்டு பார்க்கும்போது, 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10,000 ஆகக் குறைவாக இருந்தாலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இன்னும் சிக்கலில் இருந்தே வருகின்றன என்று மூத்த மனிதவள துறை நிபுணர்களும், தொழில் துறை நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களில், ஸ்விக்கி, ஓலா, கல்ட்ஃபிட், லிசியஸ், ப்ரிஸ்டின்கேர் மற்றும் பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
ஃபிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் போன்ற சில பெரிய நிறுவனங்களும் ஊழியர்களைக் குறைத்துள்ளன. ஃபிளிப்கார்ட் தனது ஊழியர்களில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது சுமார் 1100 முதல் 1500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. பேடிஎம் நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட தயாராகி வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. அதேபோல ஓலா கேப்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாத இறுதியில் சுமார் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஸ்விக்கி நிறுவனமும் சுமார் 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த அளவிலும், யாருக்கும் தெரியாமலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அன்ஷுமன் தாஸ் கூறுகையில், இந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 40-50% பேர் "Silent Layoffs" மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அதாவது, நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இந்த பணி நீக்கத்திற்கான காரணங்களாக செயல்திறன் போன்றவற்றைக் கூறியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர், அதிக சம்பளம் வாங்கியவர்கள் ஆவார்கள். அவர்கள் குறைவான சம்பளம் வாங்கும் குறைந்த அனுபவம் உள்ளவர்களால் மாற்றப்பட்டுள்ளன என்று தாஸ் கூறியுள்ளார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணி நீக்கங்கள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முடிவாக, ஸ்டார்ட்அப் துறையில் சில சவால்கள் இருந்தாலும், முன்னேற்றம் காணப்படுகிறது. நிதி கிடைப்பது அதிகரிப்பதும், வெற்றிகரமான பங்குச்சந்தை பதிவுகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் உள்ளன. இதன் விளைவாக, அடுத்த சில மாதங்களில் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நாம் முன்பு பார்த்தது போல் போன ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் குறைந்த பணி நீக்கங்களே உள்ளன. இது இனிவரும் காலத்திலும் இது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications