இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்கள் மெல்ல மெல்ல மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கிறது. ஒரு புறம் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் 2025-ஆம் ஆண்டில் கண்டிப்பாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 2024-ஆம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்தது.
ஒலா எலக்ட்ரிக், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ், பைஜுஸ், ஸ்விக்கி மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை இந்த ஆண்டு 100 முதல் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தன.

எக்கனாமிக் டைம்ஸ் 2023-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டதை விட 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறைந்த ஊழியர்களே பணிநீக்கம் செய்யப்பட்டதாக லாங்ஹவுஸ் கன்சல்டிங் தரவுகளை மேற்கோள் காட்டி தெரிவித்திருக்கிறது. ஏனெனில் 2023-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 11,250 பேர் வேலை இழந்தனர். இந்த ஆண்டு தங்கள் பணியாளர்களை குறைத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து பார்ப்போம்.
ஓலா எலக்ட்ரிக்: மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நவம்பர் மாதம் 300 முதல் 400 ஊழியர்களை குறைத்ததாக தெரிவித்தது. இந்த பணி நீக்கங்கள் அதிகரிக்கலாம் என்றும் 500 ஊழியர்கள் வரை இதனால் பாதிக்கப்படலாம் என்றும் பணி நீக்க செயல்முறை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓலா கேப்ஸ்: ரைடு ஹைலிங் தளமான ஓலா கேப்ஸ் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது அதன் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதமாகும்.
பிளிப்கார்ட்: ஜனவரி மாதம் வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 1100 முதல் 1500 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்தது/ இது அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 5 முதல் 7 சதவீதமாகும். கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செயல்முறைகளை தொடர்ந்து செய்து வந்த பிளிப்கார்ட் நிறுவனம், செலவுகளை நிர்வகிப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.
பைஜூஸ்: பெரும் நிதி நெருக்கடியில் உள்ள எட்டெக் நிறுவனமான பைஜூஸ், ஏப்ரல் மாதம் அதன் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் குழுக்கலில் இருந்த 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
ஸ்விக்கி: உணவு மற்றும் மளிகை மளிகை பொருட்களை வினியோகம் செய்யும் டெலிவரி தளமான ஸ்விக்கி, ஜனவரி மாதம் தனது முதல் சுற்று பணி நீக்கத்தை தொடங்கியது. அப்போது சுமார் 6 சதவீத ஊழியர்கள் குறைக்கப்பட்டனர். இதனால் 350 முதல் 400 பேர் வேலை இழந்தனர்.
பேடிஎம்: ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம் சுமார் 2775 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது சுமார் 20 சதவீத ஊழியர் குறைப்பாகும். இந்தியா ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் பேடிஎம் நிறுவனத்தை கடுமையான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதிலிருந்து அனைத்து வங்கி செயல்பாடுகளையும் நிறுத்துமாறும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனை அடுத்து சிக்கலில் இருந்த பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் தனது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
ஷேர்சாட்: ஷேர்சாட் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் சுமார் 5% பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.


Click it and Unblock the Notifications