பாகிஸ்தானுக்கு சீனா கிட்டதட்ட 2 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவி செய்ய ஒப்புதல் அளித்திருந்தாலும் அந்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் தான் உள்ளது. ஒருப்பக்கம் ஐஎம்எப் கடனை பெற வேண்டும் என்பதற்காக வரிகளை கடுமையாக உயர்த்தி பெரும் பாதிப்பை மக்களுக்கு அளித்தும் வரும் பாகிஸ்தான் அரசு பல்வேறு செலவுகளையும் குறைத்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு மக்களுக்கு கூடுதல் சுமையை அளித்துள்ளனர், அந்நாட்டில் இருக்கும் பணவீக்கத்தை குறைக்கவும், கடனுக்கான வருமானத்தை அதிகரிக்கவும் வட்டி விகித்தை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.
இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது...
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ள பணவீக்கத்தை எதிர்கொள்ள, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 300 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
300 அடிப்படை புள்ளிகள்
பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கி இந்த முறை பணவீக்கத்தை குறைக்க 200 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபரிமிதமான பணவீக்க அழுத்தம் காரணமாக 300 அடிப்படை புள்ளிகள் அதாவது 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
பணவீக்கம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் அதிக எரிசக்தி மற்றும் உணவு விலைகள் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் 31.5 சதவீதமாக உயர்ந்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டில் பதிவான அதிகபட்ச பணவீக்க அளவு இதுதான்.
ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் மத்திய வங்கி ஜனவரி மாதத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 17 சதவீதமாக அறிவித்தது. பாகிஸ்தான் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தானின் நாணய கொள்கை கூட்டம் இப்போது இல்லை என்றாலும் பணவீக்க அதிகரிப்பு காரணமாக ஆஃப்-சைக்கிள் கூட்டத்தை நடத்தியுள்ளது.
20 சதவீதம்
இந்த கூட்டத்தில் தான் பாகிஸ்தான் மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 3 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2022 ஜனவரியில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் முக்கிய வட்டி விகிதங்களை 1,025 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎம்எப்
ஐஎம்எப் அமைப்பின் மாபெரும் கடன் திட்டத்தின் முதல் தவணையான 1.1 பில்லியன் டாலர் கடன் தவனையை பெற காத்துக்கொண்டு இருக்கும் பாகிஸ்தானுக்கு கடந்த வாரம் சீனா 700 மில்லியன் டாலர் அளவிலான கடனை நிதியாக கொடுத்து அந்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தியது.
சீனா ICBC உதவி
இதை தொடர்ந்து மீண்டும் சீன அரசு Industrial and Commercial Bank of China Ltd (ICBC) வாயிலாக 1.3 பில்லியன் டாலர் அளவிலான கடனை அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நிதியமைச்சர்
இப்புதிய கடனுக்கான முதல் தவணையாக 500 மில்லியன் டாலரை அடுத்த வாரத்தின் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை கிடைக்கும் என்றும், அடுத்த 500 மில்லியன் டாலர் கடனை அடுத்த 10 நாளில் அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications