இந்தியாவை சேர்ந்த பெரும்பணக்காரர்கள் பலரும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக பின்பற்றும் ஒரு நடைமுறை குறித்து கோடக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் நீலேஷ் ஷா வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை பெற்றுள்ளது.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நீலேஷ் ஷா "நீங்கள் தகுதியான பத்திரங்களின் மூலம் கிடைத்த வருவாய்க்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருந்தால் வருடத்தில் 183 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சென்று தங்கி விடுங்கள். நீங்கள் இந்த மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டிய தேவை இருக்காது" என கூறியுள்ளார். இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலரும் இந்தியாவில் மூலதன ஆதாய வரியை செலுத்துவதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நிதியாண்டில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளிநாடுகளில் சென்று தங்கி விடுகின்றனர்" என கூறியுள்ளார்.

அண்மையில் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு முதலீட்டாளர் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பனை செய்ததன் மூலம் 1.35 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டி இருந்ததாகவும் மும்பை வருமான வரி சட்ட தீர்ப்பாயம் அவருக்கு இந்த மூலதன ஆதாய வரியை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்திருப்பதாகவும் தன்னுடைய பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே இருக்கக்கூடிய வரி சமந்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.
குறிப்பிட்ட அந்த நபர் எந்த நாட்டில் வசிக்கிறாரோ அங்கு தான் இந்த வரிகளை பிடித்தம் செய்ய முடியும் என இந்த ஒப்பந்தங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பலரும் பயன்படுத்திக்கொண்டு மூலதன ஆதாய வரி செலுத்தாமல் தப்புகின்றனர் என அவர் குறிப்பிடுகிறார் . சிங்கப்பூர், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளோடு இந்தியா வரி சம்பந்தப்பட்ட சில ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருக்கிறது.
இதன்படி இந்தியர்கள் அந்த நாடுகளில் 183 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாக கருதப்படுவார்கள். அப்போது அவர்கள் விற்பனை செய்து சொத்துக்களை பணமாக்கும் போது மூலதன ஆதாய வரியை இந்தியாவில் செலுத்தாமல் அவர்கள் தங்கி இருக்கும் நாடுகளில் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மூலதன ஆதாய வரி என்ற ஒரு பிரிவே கிடையாது என்பதால் இந்த முதலீட்டாளர்கள் எந்த ஒரு பணத்தையும் செலுத்தாமல் தப்பி விடுகின்றனர்.
எனவே பெருமணக்காரர்கள் பலரும் ஒரு ஆண்டில் 183 நாட்களுக்கு மேல் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் தங்கி விட்டு இந்தியாவில் வரி செலுத்தாமல் தப்புகின்றனர். அதிக வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே பலரும் வெளிநாட்டுக்கு செல்கிறார்கள் என்பதால் அரசு இந்த சட்டப்பிரிவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என அவர் கூறியுள்ளார். தற்போதைக்கு இது ஒரு சிறிய தொகையாக நமக்கு தெரியும் ஆனால் அது நாளை பெரிய தொகையாக மாறி இருக்கும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications