பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பேரன் ஜைத் உசைன் நவாஸின் திருமண விழாவில் JSW ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ராவிந்த் ஜாதி உம்ராவில் உள்ள நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் அரண்மனை வீட்டில் நடைபெற்ற திருமண விழாவில் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 700 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதில் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் திருமணத்தில் பல இந்திய விருந்தினர்கள் கலந்து கொண்டதாகவும், அதில் ஜிண்டால் குடும்பமும் அடங்குவதாகவும் உறுதிப்படுத்தினார்.
ஜிண்டால் குடும்பத்திற்கும் நவாஸ் ஷெரீப் குடும்பத்திற்கும் நீண்டகால உறவு உள்ளது, ஜிண்டால் குடும்பம் நவாஸ் ஷெரீப்பின் மகன் உசைன் நவாஸ் வளைகுடா பிராந்தியத்தில் ஒரு ஸ்டீல் ஆலை நிறுவுவதில் உதவி செய்ததாக தெரிகிறது.
நவாஸ் ஷெரீப் குடும்பம் விழாவிற்கு பல இந்தியர்கள் வந்தாலும், குறிப்பாக ஜிண்டால் குடும்பத்தின் வருகையை மிகவும் ரகசியமாக வைத்திருந்தது. இந்திய விருந்தினர்கள் தனியார் விமானம் மூலம் லாகூருக்கு வந்ததாக தெரிகிறது. திருமண விழா முழுவதும் ஜாதி உம்ரா-வில் இருக்கும் வீட்டிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications