இந்திய பங்குச் சந்தைகள் சமீபகாலமாக கடுமையாக சரிவு கண்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் போட்ட பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அடுத்த 12 மாதங்களுக்குள் 10 முதல் 60 சதவீதம் வரை ஆதாயம் தர வாய்ப்புள்ள லுப்பின் உள்ளிட்ட 5 நிறுவன பங்குகளை தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. அந்த பங்குகளை பார்ப்போம்.

லுப்பின்
தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், மருந்து துறையை சேர்ந்த லுப்பின் நிறுவனம் குறித்த நியூட்ரல் என்ற தனது மதிப்பீட்டை தொடர்ந்து மாற்றம் இன்றி வைத்துள்ளது. அதேசமயம் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.2,150லிருந்து ரூ.2,225ஆக அதிகரித்துள்ளது. இது கடைசியாக வர்த்தகம் செய்யப்பட்ட விலையான ரூ.2,024லிருந்து சுமார் 10 சதவீத உயர்வை குறிக்கிறது.
அசோக் லேலண்ட்
வர்த்தக வாகனங்களில் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை கோல்ட்மேன் சாக்ஸ் தொடருகிறது. அதேவேளையில், இப்பங்கின் இலக்கு விலையை ரூ.280ஆக அதிகரித்துள்ளது. முதலில் இலக்கு விலையை ரூ.260ஆக நிர்ணயம் செய்து இருந்தது. 12 மாதங்களில் கடைசியாக வர்த்தகம் செய்யப்பட்ட விலையான ரூ.219லிருந்து சுமார் 27 சதவீதம் வரை இப்பங்கு உயர வாய்ப்புள்ளதை இது குறிக்கிறது.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மீதான வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை தரகு நிறுவனமான யுபிஎஸ் தொடருகிறது. இருப்பினும், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் பங்கின் இலக்கு விலையை ரூ.670லிருந்து ரூ.600ஆக குறைத்துள்ளது. இருந்தாலும் அடுத்த 12 மாதங்களுக்குள் இப்பங்கின் கடைசி வர்த்தக விலையான ரூ.373லிருந்து 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ்
ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் குறித்து வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை தரகு நிறுவனமான ஜெஃப்பெரிஸ் தொடருகிறது. ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.1,000ஆக நிர்ணயம் செய்துள்ளது. இப்பங்கின் கடைசி வர்த்தக விலையான ரூ.640லிருந்து 56 சதவீதம் வரை ஆதாயம் அளிக்க வாய்ப்புள்ளதை இது வெளிப்படுத்துகிறது.
சீமென்ஸ்
கனரக எலக்ட்ரிக் உபகரணங்கள் பிரிவை சேர்ந்த சீமென்ஸ் நிறுவனம் குறித்து வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டில் யுபிஎஸ் மாற்றம் செய்யவில்லை. இப்பங்கின் இலக்கு விலையை ரூ.8,000ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவன பங்கின் கடைசி வர்த்தக விலையான ரூ.5,206லிருந்து 53 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதை இது குறிப்பிடுகிறது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications