சிலர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பேங்கில் இருந்தால் பத்திரமாக இருக்கும் என்று எண்ணி தங்களுடைய சேமிப்பு கணக்கிலேயே வைத்திருப்பார்கள். இப்படி வைத்திருப்பதால் என்ன லாபம்? உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கு 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையிலான வட்டியை மட்டுமே தருகின்றன. எனவே நீங்கள் உங்கள் பணத்தை சேவிங்ஸ் அக்கவுண்டில் வைத்திருப்பதால் எந்தவித பயனும் இல்லை. சுருக்கமாக சொன்னால் உங்கள் வீட்டு பீரோவில் பணத்தை வைத்திருப்பதும், சேவிங்ஸ் அக்கவுண்டில் வைத்திருப்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
சேவிங்ஸ் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கலாம்?: சேமிப்பு கணக்கு என்று சொல்லப்படுகிற நம்முடைய வங்கி சேவிங்ஸ் அக்கவுண்டில் அடுத்த 3 முதல் 6 மாத செலவுகளைச் சமாளிக்க தேவையான பணத்தை மட்டும் வைத்திருந்தால் போதும். அதோடு வயதான பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள் போன்றவர்களுக்கு மருத்துவச் செலவுகள் இருந்தால் அதற்கான பணத்தையும் வைத்திருக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு தேவைப்படும்போது எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் தேவைக்கு அதிகமான பணத்தை சேவிங்ஸ் அக்கவுண்டில் அப்படியே வைத்திருப்பதால் ஒரு பயனும் இருக்காது. பணம் அப்படியே இருப்பதற்கும் அதற்கு வட்டி கிடைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அதிக அளவிலான பணத்தை அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக அதற்கு வட்டி கிடைத்தால் இன்னும் உதவியாக இருக்கும்.

இதற்கான மாற்று வழி என்ன?: பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் நினைத்தவுடன் பணத்தை எடுக்க வேண்டும் என்று எண்ணினால் வங்கிகள் வழங்கும் ஸ்வீப் இன் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பணத்தை போடுவதற்கு சிலர் பயப்பட காரணம் என்ன தெரியுமா? நீங்கள் டெபாசிட் செய்யும்போதே குறிப்பிட்ட கால அளவை தேர்ந்தெடுத்திருப்பீர்கள். உதாரணமாக 1 வருடம், 2 வருடம், 5 வருடம் மற்றும் 10 வருடம் போன்ற கால அளவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
டெபாசிட் செய்த பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த முதிர்வு தேதி நெருங்கும் வரையில் பணத்தை எடுக்கவே முடியாது. ஒருவேளை இடையில் பணம் தேவைப்பட்டால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். இது போன்ற காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு தான் சிலர் தங்களுடைய சேவிங்ஸ் அக்கவுண்டில் அளவுக்கு அதிகமான பணத்தை வைத்திருக்கின்றனர்.
இப்படி வைத்திருப்பவர்களுக்காக தான் இந்த ஸ்வீப் இன் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஸ்வீப் இன் டெபாசிட் திட்டங்களின் முக்கிய நன்மை என்ன தெரியுமா? எவ்வளவு FD-யில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீங்களே தீர்மானிக்கலாம். உங்களிடம் ரூ.50,000 இருக்கிறது என்றால், அதில் ரூ.25,000 FD-க்கு மாற்ற வேண்டும் என்று நீங்களே நிர்ணயிக்க வேண்டும். எப்போதெல்லாம் உங்களுடைய கணக்கில் நீங்கள் நிர்ணயித்த வரம்புக்கு மேல் பணம் இருக்கிறதோ? அப்போதெல்லாம் தானாகவே நீங்கள் நிர்ணயித்த தொகை FD கணக்கிற்கு மாறிவிடும்.
ஸ்வீப் இன் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் மற்றொரு நன்மை அதன் லிக்குவிடிட்டி. ஏதேனும் அவசர காலம் ஏற்படும்போது, உங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து உடனடியாக பணத்தை எடுக்கலாம். ஒருவேளை உங்களுடைய வங்கிக் கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு கீழே பணம் குறையும் போது, வங்கி தானாகவே பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் நீங்கள் டெபாசிட் செய்த பகுதியளவு பணத்தை உங்கள் சேமிப்பு கணக்கிற்கே மாற்றிவிடும். இப்படி நீங்கள் முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
உதாரணமாக உங்கள் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சாதாரண சேமிப்பு கணக்கிற்கு 3 சதவீத வட்டி வழங்கப்பட்டால், ஒரு வருடத்திற்கு ரூ.6,000 வட்டி மட்டுமே கிடைக்கும். அதுவே ஸ்வீப் இன் பிக்சட் டெபாசிட்டில் 7 முதல் 8 சதவீதம் வரையிலான வட்டி வழங்கப்படும். இதனால் உங்களுடைய வருடாந்திர வருமானம் ரூ.16,000-த்திற்கு மேல் இருக்கும்.


Click it and Unblock the Notifications