ஈரான் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணம் ஹார்முஸ் ஜலசந்தி தான். ஈரானுக்கு அருகே இருக்க கூடிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான எரிபொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
எல்பிஜி, கச்சா எண்ணெய், உரம் உள்ளிட்டவை வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல இருக்கும் ஒரே பாதை ஹார்முஸ் ஜலசந்தி. போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. அதாவது சரக்கு கப்பல்கள் சென்றால் வீழ்த்துவோம் என எச்சரித்துள்ளது.

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டிருக்கின்றன. இதற்கிடையே எதிரி நாட்டு கப்பல்களை தவிர மற்ற நாடுகளின் கப்பல்களை அனுமதிப்போம் என ஈரான் கூறியது. அதே வேளையில் கப்பல்களுக்கு கட்டணம் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் போரில் ஈரான் கை ஓங்கி இருப்பதற்கு முக்கிய காரணமே ஹார்முஸ் ஜலசந்தி தான். இதனால் வளைகுடா நாடுகளில் பல கோடி கணக்கிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. கச்சா எண்ணெய், எல்பிஜி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டு நிறுவனங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியா போன்ற நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு விலை வாசி உயர்வு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனவே ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திற்கு ஒரு முடிவினை கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகளும் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டன. எனவே ஈரான் போரில் முக்கிய சக்தியாக ஹார்முஸ் ஜலசந்தி உருவெடுத்திருக்கிறது. இந்த சூழலில் இந்த போர் முடிந்த பிறகு ஹார்முஸ் ஜலசந்தி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு விரைவில் அனைத்து நாடுகளின் சரக்கு கப்பல்களுக்கும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ஹார்முஸ் ஜலசந்தியை யார் மேலாண்மை செய்யப் போகிறார்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவும் ஈரானும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டது என டிரம்ப் கூறினார், ஆனால் அதனை ஈரான் மறுத்திருக்கிறது.
இத்தகைய சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். தற்போது ஈரானுடன் நடைபெற்று வரக்கூடிய பேச்சுவார்த்தை வெற்றி பெறும் பட்சத்தில் விரைவிலேயே இது சாத்தியப்படும் என அவர் கூறியிருக்கிறார். மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவும் ஈரானும் இணைந்து மேலாண்மை செய்யும் என்ற தகவலை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
எந்த கமேனி அடுத்ததாக ஈரானை ஆட்சி செய்தாலும், அவரும் அமெரிக்காவும் சேர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்ற பதிலை அவர் வழங்கி இருக்கிறார். முன்னதாக இந்த பகுதியை பயன்படுத்தும் நாடுகள் தங்களுடைய போர்க்கப்பல்களை அனுப்பி கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யலாம் என டிரம்ப் கூறியிருந்தார் ஆனால் அதற்கு அமெரிக்காவின் நட்பு நாடுகளே கூட முன் வரவில்லை.


Click it and Unblock the Notifications