மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் இதே போல் விலை உயர்வு இருக்கும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவித்திருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் பெட்ரோல், டீசல் தொடங்கி தக்காளி, பருப்பு வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். ஏன் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது? இதனால் இந்தியாவில் என்ன நடக்கும்? என்பதைப் பார்ப்போம்.
சர்வதேச ஆய்வு நிறுவனமான வுட் மெக்கன்சி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் வரவிருக்கும் மாதங்களில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்று 200 டாலரை எட்டக்கூடும் என்று கணித்துள்ளது. அமெரிக்கா ஈரான் இடையேயான போர் பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. அதிலிருந்து உலக அளவில் எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதித்தது.
இதனால் ஏற்கனவே கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏனெனில் ஸ்ட்ரெயிட் ஆப் ஹோர்முஸ் என்று சொல்லப்படுகிற ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையில் உள்ள கடல்வழி பாதை போர் பதற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாகத் தான் கச்சா எண்ணெய் பிற நாடுகளைச் சென்றடைகிறது.

ஹர்மோஸ் பாதை வழியாக நாளொன்றுக்கு 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய், அதாவது 1.4 கோடி பேரல்கள் பிற நாடுகளுக்கு இறக்குமதியாகிறது. இந்நிலையில் இந்த கடல் பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது 1.4 கோடி பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு வர முடியாமல் முடங்கியுள்ளது.
இதற்கு கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 1.1 கோடி பேரல்கள் உற்பத்தி தடைபட்டுள்ளது. உலக அளவில் 20% வரை LNG விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்தால், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமல்லாமல், உலக வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்படும் என்கிறார் வுட் மெக்கன்சி நிறுவனத்தின் பொருளாதார பிரிவு தலைவர் பீட்டர் மார்ட்டின். அதுவே ஜூன் மாதத்திற்குள் அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுமூகமாக முடிந்து போர் நிறுத்தப்பட்டால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இதனால் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 80 டாலரை எட்டும். 2027 வாக்கில் 65 டாலராக குறையவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இதே போர் தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை நீடித்தாலே, பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி பற்றாக்குறை 2026-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.
அதுவே 2026-ஆம் ஆண்டு முழுவதும் இதே போர் பதற்றும் நிலவி ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால், அது உலக பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் கண்டிப்பாக கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்று 200 டாலரை எட்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே எச்சரிக்கையை சமீபத்தில் ஈரானும் கூறியிருந்தது. ஈரானின் எச்சரிக்கை உண்மையாகிவிடும் சூழலே நிலவி வருகிறது.
தற்போது பிரண்ட் கச்சா எண்ணெய் 2.3 சதவீதம் அதிகரித்து 104.96 டாலராக உள்ளது. WTI கச்சா எண்ணெய் 1.8% அதிகரித்து 98.08 டாலராக உள்ளது. கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும். இதனால் அதை சார்ந்து இருக்கும் மற்ற தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இதைத்தான் "பாஸ் த்ரு எபெக்ட்" என்று கூறுகிறார்கள். அதாவது ஒரு பொருளின் விலை அதிகரிக்கும் போது அதை சார்ந்தவையும் அதிகரிக்கிறது.
உதாரணமாக பெட்ரோல் டீசல் அதிகரித்தால் விளை பொருட்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அதிக செலவாகும். இதை மக்கள் மேல் திணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இனி வரும் காலங்களில் பிரச்சனை முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்து தான் இது போன்ற பாதிப்புகள் குறையத் தொடங்கும்.


Click it and Unblock the Notifications