ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இத்தகைய சூழலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பாகிஸ்தானில் நடைபெற்றது. அது தோல்வியில் முடிந்தது.
ஈரானும் அமெரிக்காவும் 2 வாரமாக ராணுவ தாக்குதலை நிறுத்தியுள்ளனவே தவிர வார்த்தை மோதல்களை நிறுத்தவில்லை. இந்த சூழலில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை குறித்த எந்த அறிகுறியும் தென்படாமல் இருக்கிறது. அமெரிக்காவும் சரி, ஈரானும் சரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஒரு நாள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக அறிவிக்கிறார்கள் மறுநாளே அது மூடப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

ஈரான் ஒன்று கூறினால் அதற்கு முரணான கருத்தை அமெரிக்கா வெளியிடுகிறது. இதனால் ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ஒரு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. அதிபர் டிரம்ப் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும் அடுத்த கட்டமாக ஈரானில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் வகையில் ஈரான் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பை முட்டாள் என குறிப்பிட்டு கருத்து வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த ஒரு கப்பல்களும் செல்ல முடியாது அதற்கு நாங்கள் தடை விதித்து இருக்கிறோம் என அறிவித்திருக்கும் ஈரான் கடற்படை சில முட்டாள்களின் டிவிட்டர் பதிவுகளால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு விடாது என கூறி இருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது, இதனை கடக்க முயற்சிக்காதீர்கள் என ஈரான் கடற்படை சார்பாக கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஈரான் ராணுவ தலைமைக்கும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறதா என்ற பேச்சுக்களும் எழுந்திருக்கின்றன.
ஏனெனில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன் வருவதை போலவும் ராணுவத்தில் இருப்பவர்கள் அதற்கு முன்வராததை போலவும் அவர்கள் அறிவிப்புகள் தென்படுகின்றன. இதனால் ஈரானையும் ஈரான் போரையும் யார் வழிநடத்துகிறார்கள் என தெரியவரவில்லை. ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் இதனால் தங்கம், வெள்ளி விலை சரியும். ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தும். இது நேரடியாக நம் பாக்கெட்டையே பதம் பார்க்கும்.
இந்த சூழலில் ஹவுதி கிளர்ச்சியாளர் பாப் அல் மண்டேப் நீரிணையையும் மூடுவதாக அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு நிகரான முக்கிய வழித்தடமாக இது இருப்பதால் இது மூடப்படுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications

