"கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? " என்று கேட்பது ராஜஸ்தானை சேர்ந்த ஆண்களுக்குத் தான் பொருந்தும்போல. அப்படியொரு விநோதமான சம்பிரதாயத்தை ராஜஸ்தானின் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
அவர்களுக்குள் திருமணம் நடந்தால் முதல் மனைவிக்குப் பிள்ளைகள் பிறக்காது என்றும் அதற்காக மணமகனுக்கு இரண்டாவதாக ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வைக்கின்றனர்.

அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தத் தருணத்தில் இப்படியொரு மூடநம்பிக்கையில் திளைக்கின்றனர் ஜெய்சல்மார் கிராம மக்கள்.
ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள ராம்தேவ் கி பஸ்தி கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் தான் ஒருவருக்கு ஒருத்தி என்ற சம்பிரதாயம் மதிக்கப்படாமல் தூக்கியெறியப்படுகிறது.
காலங்காலமாக இந்த கிராமத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
ஹிந்து திருமணச் சட்டத்தின்படி பலதார திருமணம் சட்டவிரோதமாகும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் ராம்தேவ் கி பஸ்தி கிராமத்தினர் தங்களது விசித்திரமான மூடநம்பிக்கையினால் கண்டுகொள்வதேயில்லை.
இந்த நம்பிக்கைக்கு வேறொரு அடிப்படை உள்ளது. அது என்னவென்றால் குடும்பத்துக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டுமாம்!
சேகரித்த தகவல்களின்படி பார்த்தால் அந்த கிராமத்தில் முதல் மனைவியாக இருப்பவருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது என்றும் வெறும் பெண் குழந்தைகளையே பிரசவிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்ற காரணத்தினால் ஆண்கள் இரண்டாவது திருமணத்தை செய்கின்றனர். இதன் விளைவாக இந்தக் கிராமத்தில் ஆண்களைக் காட்டிலும் அதிகளவில் பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் காலப்போக்கில் நவநாகரிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ராம்தேவ் கி பஸ்தி கிராமத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் இந்த விநோத வழக்கத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆண் வாரிசு இல்லாவிட்டாலும் இரண்டாவது திருமணம் செய்வதற்கு மறுத்து வருகின்றனர். பாராட்ட வேண்டிய செயல்.
இருப்பினும் கிராமத்துப் பெருந்தலைகள் இந்த இளைய தலைமுறையினரின் முடிவை ஏற்காமல் கோபப்படுகின்றனர். எப்படியாவது குடும்பத்துக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று கூறி தங்கள் மகன்களை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
இதனிடையே பலதார திருமணம் சரியா தவறா என்ற விவாதம் இப்போது அந்த கிராமத்தில் வலுத்துள்ளது. இந்த தவறான செயலால் பெண்களுக்கான சம உரிமையும், அடிப்படை உரிமையும் மறுக்கப்படுவதாக இளைய தலைமுறையினர் வாதிடுகின்றனர். இந்த வாதம் கிராமத்தினருக்குள் ஒரு பிரிவினையையே ஏற்படுத்திவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications