மும்பை: தமிழ்நாட்டை சேர்ந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை அந்தேரி பகுதியில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு இடத்தை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே ஈ ஞானவேல் ராஜா அவர்களுக்கு சொந்தமான நிறுவனம்தான் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.
இந்த நிறுவனம் மும்பை அந்தேரி பகுதியில் 3,414 சதுர அடி அளவு கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஸேப்கீ என்ற ரியல் எஸ்டேட் தரவு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் படத் தயாரிப்பு மற்றும் பட விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு சூரியாவின் சில்லுனு ஒரு காதல் படம் தான் இந்நிறுவனம், தயாரித்து வெளியிட்ட முதல் படம். பெரும்பாலான சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. நடப்பாண்டில் இந்த நிறுவனத்தின் தங்கலான் படம் வெளியானது.
இவரது நிறுவனம் தயாரித்த வா வாத்தியார் மற்றும் கங்குவா ஆகிய படங்கள் நடப்பாண்டிலேயே வெளியாக உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம், மும்பையில் தங்களுடைய படத் தயாரிப்பு அலுவலகத்தை திறந்தது. தற்போது அந்தேரி பகுதியில் ஒரு குடியிருப்பையும் இந்த நிறுவனம் வாங்கி இருக்கிறது. பாலிவுட்டில் இந்த நிறுவனம் கவனம் செலுத்த இருக்கிறதா என்ற பேச்சு இதன் மூலம் எழுந்துள்ளது.
மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள டி.என். நகரில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு இருக்கக்கூடிய பகுதியில் மொத்தம் 192 அப்பார்ட்மென்ட்கள் இருக்கின்றன. இதில் குடியிருப்பை வாங்கியதற்காக ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனம் 90 லட்சம் ரூபாயை வரியாக செலுத்தியுள்ளது.மேற்கு அந்தேரி பகுதி பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்களின் ரியல் எஸ்டேட் முதலீட்டு பகுதியாக இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்களான அனுபம் கேர், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்த பகுதியில் குடியிருப்புகளை வாங்கி வைத்துள்ளனர். தற்போது தென்னிந்திய நட்சத்திரங்களும் இங்கே முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications