கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்னும் ஔவையார் பாடல் வரிகளுக்கு எற்ப இளம் வயதில் வறுமை பலரை பல திசைகளுக்கு கொண்டு செல்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே வறுமையை வென்று வாழ்க்கையிலும் வரத்தகத்திலும் வெற்றி பெறுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் ரகுநந்தன்.
எப்படி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு படிப்பை முடித்து வேலையில் சேர்ந்து ஒரு முக்கிய கட்டத்தை அடைவது கடினமோ, அதேபோல தான் முதல் தலைமுறை தொழிலதிபர்களும். சிறிய அளவில் வியாபாரம் செய்வதிலேயே பல போட்டிகள் இருக்கும் வேளையில் ஒரு பிராண்டை உருவாக்கி அதை வெற்றிகரமாக மாற்றுவதில் எவ்வளவு பிரச்சனை இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

வறுமையில் இருந்து மீண்டு வந்து விடாமுயற்சியுடன் பணியாற்றி தற்போது ரூ.300 கோடி மதிப்புள்ள பிராண்டை உருவாக்கியுள்ளார் ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத். மும்பையில், ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் 1984 இல் நேச்சுரல் ஐஸ்கிரீம் தயாரிப்பைத் தொடங்கினார்.
இன்று மும்பையில் மட்டும் அல்லாமல் பெங்களூர், கோவா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் என நாட்டின் பல பகுதிகளில் விற்க துவங்கியது மட்டும் அல்லாமல் ஐஸ்கிரீம் விற்பனையில் இந்த பிராண்ட் தனி இடத்தை பிடித்துள்ளது. ரகுநந்தன் தனது வாழ்வில் பெரும் பகுதியை Natural Ice Cream பிராண்டையும், அதன் வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்வதற்காகவே செலவிட்டார்.
ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் 1954 ஆம் ஆண்டு கர்நாடகாவின் மங்களூர் பகுதிக்கு அருகில் முல்கி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். ரகுநந்தன் தந்தையார் ஒரு பழ வியாபாரி அவருக்கு ஏழு குழந்தைகள், இதில் ரகுநந்தன் இளையவர். 7 குழந்தைகளை வளர்க்க போதுமான பணம் இல்லாத காரணத்தால் ரகுநந்தன் 15 வயதிலேயே மும்பைக்கு தனது சகோதரர் உடன் இணைந்து பாவ்பாஜி விற்பனை செய்யும் பணிக்கு வந்தார்.
இதை தொடர்ந்து ரகுநந்தன் தனது சகோதரரின் உணவகத்தில் பணியாற்றிய போது தான், பழங்களில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஐடியா அவருக்கு வந்தது. இந்த ஐடியாவுக்கு சகோதரரின் உணவகத்தில் இருந்து நிதியுதவி கிடைத்தது, இதை வைத்து சொந்தமாக ஐஸ்கிரீம் பார்லர் துவங்க முடிவு செய்தார்.
ரகுநந்தன் மும்பை ஜூஹூ பகுதியில் 200 சதுரயில் ஐஸ்கிரீம் பார்லர்-ஐ 1984 ஆம் ஆண்டு துவங்கி புதிய சுவைகளில் ஐஸ்கிரீம் விற்க துவங்கினார். இந்த பாதையில் பல தடைகள், தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து தனது தயாரிப்பையும், வர்த்தகத்தையும் மெருகேற்றுவதில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்தார்.
இதன் மூலம் வெறும் 4- 8 சுவைகளில் துவங்கிய ஐஸ்கிரீம் தற்போது 125 சுவைகளில் கிடைக்கிறது, மேலும் 135 நகரங்களில் தற்போது நேச்சுரல் ஐஸ்கிரீன் ப்ரீமியம் பிராண்டாக விற்பனையாகி வருகிறது. தற்போது 400 முதல் 500 கோடி ரூபாய் வரையிலான வருடாந்திர வருமானத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications