இப்போதெல்லாம் 40 வயதுக்கும் குறைந்த இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது பெரிதும் கவலைக்கிடமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமையை சமீபத்திய ஆய்வுகளும், அரசு நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு இதய நோய்களை தடுக்கும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், விரைவில் தங்கள் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் உடல் பரிசோதனை நடத்தும் வகையில் உத்தரவிடப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனைகள் செய்ய பரிந்துரை செய்யப்படும். அரசாங்கத்தில், அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான இதய சோதனைகள் நடத்த முடிவு எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 45 வயதுக்கு குறைவானவர்கள் திடீரென இதயத் தாக்குதலால் உயிரிழக்கும் சம்பவங்கள் அனைத்தும் இனி சுகாதாரத்துறைக்கு அவசரமாக அறிவிக்கப்பட வேண்டும். 45 வயதுக்குட்பட்ட நபர்களின் இறப்புகளை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இளம் வயதிலான இதய பிரச்சனைகளை அரசு முறையாக கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார். அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இது கோவிட் தடுப்பூசியால் ஏற்படவில்லை. உண்மையில், கோவிட் தடுப்பூசி மூலம் மக்கள் பெரிதும் பாதுகாப்பாக உள்ளனர். மாரடைப்பு போன்ற சில பிரச்சனைகள், கோவிட் தொற்று நேரத்தில் எடுத்த மருந்துகளின் பக்கவிளைவுகளாக இருக்க வாய்ப்பு உள்ளது. மாரடைப்பால் இறப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "சஞ்சீவினி திட்டத்தினைப் போல அவசர இதய சிகிச்சை வழங்கும் புனீத்ராஜ்குமார் ஹ்ருதய ஜோதி யோஜனையை மாநிலத்தின் அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தி செயல்படுத்த உள்ளோம். அதனுடன், அரசுப் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் தானாக இயங்கும் AED (ஆட்டோமேட்டிக் எக்ஸ்டர்னல் டிஃபிப்ரிலேட்டர்) இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இதயதடிப்பு அல்லது இதய பிரச்சனை ஏற்படும் போது விரைவில் சிகிச்சை அளிக்க முடியும். மேலும், பொதுமக்களுக்கு CPR பயிற்சிகளை வழங்கி, அவசர நிலைகளில் தற்காலிகமாக உதவும் வகையில் அரசு முயற்சி எடுத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஸ்ரீ ஜெயதேவா இதய ஆராய்ச்சி மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம் இயக்குநர் டாக்டர் கே.எஸ். ரவீந்திரநாத் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையை பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய செய்தியாளர்களுக்கு பேசிய அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், "இந்த நிபுணர் குழுவுக்கு கோவிட்-19 தொற்றின் பக்கவிளைவுகள், குறிப்பாக இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய தாக்கங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குப் பிறகு இதயத் தாக்குதல்கள் 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக இருந்தாலும், நிபுணர் குழுவின் அறிக்கையில் கோவிட்-19 தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், தடுப்பூசி மீது உள்ள தவறான எண்ணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதய பாதிப்புகளுக்கான காரணிகளை பரிசோதிக்கவும் இந்த ஆய்வு உதவியாக இருக்கும்" என்றார்.
இதற்கிடையே, 15 வயது பள்ளி மாணவர்களுக்கு இதய ஆரோக்கிய பரிசோதனைகளை நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதயநோய் மற்றும் நோய்கள் அல்லாத (non-communicable diseases) நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் புதிய தகவல்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதய பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சிகரெட், பான்மசாலா, புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் ஆகியவை உள்ளன. மேலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக அளவில் ஸ்டீராய்டுகள் பயன்படுத்துவது போன்ற காரணங்களாலும் இதய பிரச்சனை மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.
ஜெயதேவா மருத்துவமனை மூலம் 253 இதய நோயாளிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 98% பேர் கோவிட் தடுப்பூசி எடுத்திருந்தாலும், அதில் 19 பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது. mRNA வகை தடுப்பூசி குறித்த சில சந்தேகங்கள் இருந்தாலும், இந்தியாவில் அந்த வகை தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை. கோவிட் தொற்று ஏற்பட்ட பின் 1 வருடத்துக்குள் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும் சாத்தியம் இருக்கலாம். ஆனால், கோவிட் தடுப்பூசி மற்றும் இதயத்தாக்குதலுக்கிடையே எந்த நேரடி மற்றும் நீண்டகால தொடர்பும் இல்லை என நிபுணர் குழு உறுதி செய்துள்ளது. மேலும், கோவிட் நோயின் தாக்கம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைவடைகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமான ஸ்கிரீன் நேரம் (மொபைல், லேப்டாப்) போன்ற தொழில்நுட்ப வழிகாட்டும் வாழ்க்கை முறைகள் இதயநோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதாக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications