வழக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் நாளில் தான் சிலிண்டர் விலையை உயர்த்தும். அந்த வகையில் இந்த மாதம் ஜூன் 1ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் மக்கள் மன நிம்மதியோடு இருந்தனர். ஆனால் திடீரென 7ஆம் தேதியான இன்று வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தி சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கேஸ், வணிக சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைப்பது தான் வழக்கம்.

ஈரான்- அமெரிக்கா இடையிலான போர் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்தியாவில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திலும் பல கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக உணவகங்கள் , விடுதிகள் , டீக்கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் டீ, காபி, உணவுகளின் விலைகளும் உயர்ந்துவிட்டன.
ஈரான் போர் தொடங்கியது முதலே கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த மாதத்தை பொறுத்தவரை ஜூன் 1ஆம் தேதியில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 46 ரூபாய் அதிகரித்து 3,283 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போருக்கு பின்னர் வணிக சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து நிற்கிறது.
வணிக சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்ட போதிலும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படமால் 928.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 1ஆம் தேதி விலை மாறவில்லை என்பதால் இந்த மாதம் முழுவதுமே இதே விலை தான் நீடிக்கும் என மக்கள் நம்பினர். இந்த நிலையில், வீட்டு உபயோக கேஸ் விலை இன்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு கேஸ் சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்த்தி இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன. இந்த விலை உயர்வால், டெல்லியில் 14.2 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 913 ரூபாயில் இருந்து 942 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்ந்து 928.50 ரூபாயிலிருந்து 957.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 89 ரூபாய் உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று வரை சிலிண்டர் முன்பதிவு செய்தவர்கள் பழைய விலைக்கே சிலிண்டர் கிடைக்கும். இன்று முதல் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு புதிய விலையில் தான் சிலிண்டர் கிடைக்கும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாடாய் படுத்துகிறது என்றால் தற்போது கேஸ் விலை உயர்வும் அதில் சேர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications

