அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லாத அறிஞர்களும் இல்லை. அரசியல்வாதிகளும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் பழுத்த அனுபவ அறிவும் அறக்கொடை சிந்தனையும் கொண்ட இன்போசிஸ் சுதா மூர்த்தியிடம் அரசியல் வார்த்தை செல்லுபடியாகுமா என்ன!
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய வளாகத்தை சுற்றிப் பார்க்க வந்திருந்தார் இன்போசிஸ் சுதா மூர்த்தி. அப்போது அவரை செய்தியாளர்கள் மொய்த்து விட்டனர். சரியென்று அவர்களுக்கு பதில் சொல்லத் தொடங்கிய சுதாவிடம் செய்தியாளர்கள் உங்களுக்கு அரசியலில் நுழைவதற்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டனர்.

இது என்னடா புது வம்பா போச்சு என்ற தொனியில், 'ஏங்க? நான் இப்பவே ரொம்ப சந்தோஷமாத் தான் இருக்கேன்' என்று பதில் சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டார். 73 வயதான சுதா தனக்கு அரசியலில் எல்லாம் எந்த இன்ட்ரஸ்ட் இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். புதிய நாடாளுமன்ற வளாகம் மிக நேர்த்தியாக இருப்பதாக அவர் பாராட்டினார். நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்ப்பது தனது கனவாக இருந்ததாகவும் இப்போது தனது கனவு நிறைவேறிவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இது மிகவும் அழகாக இருக்கிறது. வார்த்தைகளால் வருணிக்க முடியாது. நீண்ட நாட்களாக இந்த வளாகத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்றைக்கு எனது கனவு நனவாகிவிட்டது. இதன் கலை, கலாசாரம், இந்திய வரலாற்று சூழ்நிலை- எல்லாமே அழகாக இருக்கின்றது என்றார்.
தற்போது செயல்படும் நாடாளுமன்றத்தின் அருகிலேயே இந்தப் புதிய வளாகம் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 800க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அமர்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவைக்குப் புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் புதிய வளாகத்துக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற வளாகம் அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஆளும் பாஜக அரசின் பிரதமர் நரேந்திர மோடியின் விடாப்பிடி காரணமாக புதிய வளாகம் வெற்றிகரமாக உருவெடுத்துள்ளது. இந்தப் புதிய வளாகம் தவிர அயோத்தியில் கட்டப்படவுள்ள புதிய ராமர் கோயில் இந்த அரசின் வரலாற்று சாதனையாக பாஜகவினர் கருதுகின்றனர்.
புதிய நாடாளுமன்றத்தை வந்து பார்த்து பாராட்டிய முதல் பிரபலம் சுதா மூர்த்தி அல்ல. அவருக்கு முன்பாக சினிமா நடிகை தமன்னா பாட்டியா, திவ்யா தத்தா ஆகியோர் வந்து வியந்து சென்றனர். அப்போது மக்களவையில் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா அறிமகப்படுத்தப்பட்டதையும் பாராட்டிச் சென்றனர். இந்த மசோதா சாமானிய மக்கள் அரசியலில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கும் என்று தமன்னா கூறினார்.


Click it and Unblock the Notifications