மத்திய நிதியமைச்சகம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு கூட்டத்தை நாளை நடத்துகிறது. இதில் செல்வமகள் சேமிப்பு திட்டம், பொதுவருங்கால வைப்பு நிதி திட்டம் , மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்கள் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டின் கடைசி அலுவல் தேதியில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஆய்வு செய்யும். அரசின் செலவினம் நாட்டின் பணவீக்கம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு வட்டி விகிதங்களை உயர்த்தும், குறைக்கும் அல்லது மாற்றமில்லாமலேயே வைக்கும்.

தற்போதைய சூழலில் நாட்டில் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. அதாவது பணவீக்கம் 4.82% என்ற அளவில் உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6%-க்கு கீழே இருந்தாலும், வரவிருக்கும் மாதங்களில் பணவீக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் இதனால் வங்கி கடன் வட்டிகள் உயரும் என்பதால் அரசு சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை உயர்த்தும் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போதுள்ள வட்டி விகிதம்:
தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு (Post Office Savings Account) - 4.00% ( ஆண்டுதோறும் )
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) - 8.20% ( காலாண்டு வாரியாக )
செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY) - 8.20% (ஆண்டுதோறும்)
தேசிய சேமிப் பத்திரம் (NSC) - 7.70% ( ஆண்டுதோறும்)
கிசான் விகாஸ் பத்திரம் (KVP) - 7.50% ( முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டது )
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) - 7.10% ( ஆண்டுதோறும் )
5 ஆண்டு கால வைப்பு நிதி - 7.50% (காலாண்டு வாரியாக )
மாதாந்திர வருமானத் திட்டம் (MIA) - 7.40% ( மாதாந்திர அடிப்படையில் )
செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு திட்டம் போன்ற நீண்டகால சேமிப்பு திட்டங்களில் சிறிய வட்டி மாற்றம் கூட பல ஆண்டுகளில் காம்பவுண்டிங் முறையில் மிகப்பெரிய லாபத்தை தரும். எனவே, செப்டம்பர் 30ஆம் தேதியான நாளைய தினம் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சிறு சேமிப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டி உயர்த்தப்படுமா அல்லது பழைய விகிதங்களே தொடருமா என்பது நாளை வெளியாகும் அறிவிப்பில் தான் தெரியவரும். கடந்த பல காலாண்டுகளாகவே மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றவே இல்லை. 2025 ஜனவரி மாதம் செல்வமகள் திட்டம் மற்றும் மூன்றாண்டு கால தபால் நிலைய சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் லேசாக உயர்த்தப்பட்டது. அதன் பின் 9 காலாண்டுகளாக இவை மாறவே இல்லை.


Click it and Unblock the Notifications


