சென்னை: சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்பது வரி இல்லாத மற்றும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட ப்ரத்யேக சேமிப்புத் திட்டமாகும். 10 வயதுடைய அல்லது அதற்கு குறைவான வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயரில் SSY கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான Q 1 காலாண்டில் 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ்களை அணுகலாம். குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இது ஒரு தொடர் வாய்ப்பு நிதி ஆகும். கணக்கு தொடங்கி 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு பெண் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் போது இந்த திட்டம் முதிர்ச்சியடையும்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மாறுபடுகிறது. இதுபோன்ற சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் புதிதாக தீர்மானிக்கிறது.
எனவே இத்திட்டத்தின் வட்டி விகிதம் முழு முதலீட்டு காலத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்காது. மாறாக, ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு அறிவிக்கும் விகிதத்தைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும். சான்றாக, Q 1 காலாண்டில் அரசாங்கம் வட்டி விகிதத்தை அதிகரித்தால், உங்கள் முதலீட்டு தொகை அந்தக் காலாண்டில், அதிக வட்டி விகிதத்தைப் பெறும். மாறாக, அரசாங்கம் ஒரு காலாண்டிற்கு வட்டி விகிதத்தை குறைத்தால், உங்கள் முதலீடு குறிப்பிட்ட அந்த காலாண்டில் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறும்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான Q 1 காலாண்டில் 8.2% வட்டி விகிதத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது முழு முதலீட்டு காலத்திற்கும் நிலையானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. இந்த Q 1 காலாத்திற்கான வட்டி விகிதம் தான் 8.2 சதவீதம். இது அடுத்த Q 2 காலாண்டில் மாறுபடலாம்.
மேலும் இத்திட்டத்தைப் பயன்படுத்தி வட்டிக்கு வட்டி பெற முடியும். காலப்போக்கில் அதிக பொருளாதார மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றங்களை செய்யும் வகையில், அரசாங்கம் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மாற்றுகிறது. இது தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என BankBazaar.com இன் சிஇஓ ஆதில் ஷெட்டி கூறினார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதியிலுள்ள தொகையை வைத்து அந்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்பட்டு ஆண்டு இறுதியில் வரவு வைக்கப்படும்.


Click it and Unblock the Notifications