டெல்லி: பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மேற்படிப்புக்காக சேமிக்க உதவும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். தமிழகத்தில் இந்த திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் சேமிப்புக்கு நீண்ட கால முதலீடு அடிப்படையில் நல்ல லாபம் தரக்கூடிய திட்டம் என்பதால் மக்களின் முதலீட்டு திட்டங்களில் விருப்பமானதாக மாறியுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கு தொடங்கி சேமிக்க முடியும். தபால் நிலையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். யாருடைய பெயரில் கணக்கு தொடங்கப்பட உள்ளதோ அந்த பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
வட்டி கணக்கீடு: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி கணக்கிட்டு நிதியாண்டின் இறுதியில் வங்கியில் கணக்கு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வட்டியை மத்திய அரசு தான் நிர்ணயம் செய்கிறது. ஒவ்வொரு காலாண்டிற்கு வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவிக்கிறது.
ஒரு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன், ஜூலை - செப்டம்பர், அக்டோபர் - டிசம்பர், ஜனவரி - மார்ச் என நான்கு காலாண்டுகள் உள்ளன. இதில் புதிதாக தொடங்கும் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்திற்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தற்போது உள்ள 8.2% வட்டியே நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இதில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் :ஒரு நிதியாண்டில் இதில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1. 50 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். வருடாந்திர கூட்டு அடிப்படையில் கணக்கிட்டு வட்டித்தொகையானது வரவு வைக்கப்படுகிறது. குழந்தைக்கு 15 வயது எட்டு வரை இதில் முதலீடு செய்யலாம். அதன் பின்னர், அந்த பெண் குழந்தை 18 வயது எட்டியதும் 50 விழுக்காடு தொகையை எடுத்துக் கொள்ள முடியும். கணக்குத் துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு மொத்த தொகையும் எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது அரசு வட்டி விகிதத்தை குறைக்காமல் 8.2% என்ற அளவிலேயே வைத்திருக்கிறது, எனவே நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே கணிசமான தொகையை இதில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications