இந்தியாவின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனமான வோல்டாஸ் நிறுவனம், 2023-24ஆம் நிதியாண்டில் 35 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான ஏசி யூனிட் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்திய ஏசி விற்பனை சந்தையில் இதுவரையில் எந்தொரு நிறுவனமும் ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ஏசிகளை விற்பனை செய்ததில்லை. முதல் முறையாக ஒரு நிதியாண்டில் 2 மில்லியன் ஏசிகளை விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை வோல்டாஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வோல்டாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக இந்நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. இதனால் வீட்டுக்கும் சரி, முதலீட்டுக்கும் சரி VOLTAS தான் பெஸ்ட் என்ற நிலை உருவாகியுள்ளது
டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஏசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது மட்டும் அல்லாமல் இந்தியாவில் ஏசி வர்த்தகத்தில் பெரும் பங்கீட்டைக் கொண்டு உள்ளது. டாடா குழுமத்தின் மீதான நம்பிக்கை இந்த பிராண்டுக்குக் கிடைப்பது மூலம் இந்திய மக்கள் மத்தியில் தனி மதிப்பைப் பெற்றுள்ளது.
டாடா குழுமத்தின் (Tata Group) சிறப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் வோல்டாஸ் நிறுவனத்தின் தற்போது இந்தியாவிலேயே அனைத்து உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மாபெரும் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
வோல்டாஸ் நிறுவனத்தின் புதிய ஏசி உற்பத்தி ஆலை சென்னைக்கு அருகில் உள்ள சூரப்பூண்டி சிப்காட்டில் உருவாகிறது. சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் இது உருவாகிறது.
வோல்டாஸ் நிறுவனம், மும்பையில் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி, டாடா சன்ஸ் (Tata Sons) மற்றும் வோல்கார்ட் பிரதர்ஸ் (Volkart Brothers) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்டது. அதாவது, 70 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் வளர்ச்சியில் இணைந்து பயணித்து வருகிறது வோல்டாஸ்.
தற்போது, வோல்டாஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக நோயல் டாடா இருக்கும் வேளையில், நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் பக்ஷி பதவி வகிக்கிறார்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏசி விற்பனை சந்தையில் சுமார் 10 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 11.5 மில்லியன் யூனிட்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெயில் மக்களைச் சுட்டெரிக்கும் வேளையில் வீடுகளில் ஏசி அவசியமாகி வரும் நிலையில், இந்த சந்தை மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் வோல்டாஸ் பங்குகள் 0.60 சதவீதம் என்ற உயர்வில் 1314.90 ரூபாய்க்கு முடிந்தாலும், இன்று அதிகப்படியாக 1,352.85 ரூபாய்க்கு இப்பங்குகள் வர்த்தகமானது. இந்த 2 மில்லியன் ஏசி விற்பனை செய்தி திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
ஏப்ரல் 8 ஆம் தேதி வர்த்தகத்தில் அப்பர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டது, இதன் மூலம் 1231 ரூபாயில் இருந்து 1355 ரூபாய்க்கு உயர்ந்தது.


Click it and Unblock the Notifications