ஊரே பிரிட்ஜில் இருப்பது போல் ஜிலுஜிலுவென இருக்கும் பெங்களூரில் கூட சுட்டெரிக்கும் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில், சென்னை, ஹைதராபாத், கொச்சி நகரங்களை பற்றி கேட்கவா வேண்டும். நல்லா தன்தூரி அடுப்புக்குள் இருப்பது போன்ற பீலிங் தான் எல்லோருக்கும்.
கடுமையான வெயில் காரணமாக ஏசி, ஃப்ரிட்ஜ், ஏர் கூலர், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற கோடைக்கால பொருட்களின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 40-50% வரை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோடைக் காலம் துவங்கி ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையிலும், அக்னி நட்சத்திரம் இன்னும் வராத நேரத்திலேயே இப்படி என்றால், அக்னி நட்சத்திரம் தொடங்கிட்டா சொல்லவே வேண்டாம்.

இந்த கோடைக் காலத்தில் மக்கள் அதிகளவில் ஏசி, ஃப்ரிட்ஜ், ஏர் கூலர் வாங்குவார்கள் என்பதால் வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே கணித்து உற்பத்தி மற்றும் இருப்பை ஏற்கனவே அதிகரித்துள்ளனர். ஆனால் சந்தை வர்த்தகத்தைப் பார்க்கும் போது தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
மறுபுறம் உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்கள் தனது முழு உற்பத்தி மற்றும் சப்ளையில் இயங்கி வருகிறது. தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக வெப்ப அலை நிலவி வருவதால் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.
இந்த பகுதிகளுக்கு மே மாத வர்த்தகத்திற்காக ஒதுக்கப்பட்ட இருப்பையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் ஏசி விற்பனை 150-200% வரை அதிகரித்துள்ளது, ஃப்ரிட்ஜ் விற்பனை 25% க்கும் அதிகமாகவும், ஏர் கூலர் விற்பனை 40% க்கும் அதிகமாகவும் உள்ளது.
இதேவேளையில் வட இந்தியாவில் இதுவரை கடுமையான வெப்பம் பதிவாகவில்லை. அடுத்த ஏழு முதல் பத்து நாட்களில் வட இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்தால், ஏசி மற்றும் ஏர் கூலர் ஆகியவற்றிற்கு தேசிய அளவில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உற்பத்தியை மேலும் அதிகரிப்பது தற்போது சாத்தியமில்லை என்று உற்பத்தியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மதர் டெய்ரி, ஆமுல், பாஸ்கின் ராபின்ஸ் மற்றும் ஹவ்மோர் உள்ளிட்ட ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதேபோல் பீர் தயாரிப்பாளர்களான கார்ல்ஸ்பெர்க் மற்றும் பிரா91 ஆகிய பிராண்டுகள் மற்றும் கோகோ-கோலா, பிஸ்லெரி மற்றும் பெப்சி கோ போன்ற குளிர்பானங்கள் தயாரிப்பாளர்களின் ஆலைகள் அதிகபட்ச உற்பத்தித் திறனில் இயங்கி வருகின்றன.
இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் 100 சதவீதம் அதிக விற்பனையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற இலக்குடன் 2024 ஆம் ஆண்டை துவங்கியது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இந்த இலக்கை எட்டிவிடும் என தெரிகிறது. இதிலும் குறிப்பாக வட இந்தியாவில் பிஸ்னஸ் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்பது அடுத்த முக்கியமான விஷயம்.


Click it and Unblock the Notifications