இந்தியாவின் இரண்டாவது ஐ.டி. சேவை நிறுவனமான இன்போஸின் நிறுவனர்களில் ஒருவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. 75 வயதான நாராயண மூர்த்தி மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக சொல்வார்.
கடந்த அக்டோபர் மாதம் பேட்டி ஒன்றில், இந்தியாவின் வேலை உற்பத்தித்திறன் உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும். நாம் நமது வேலை உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரையில், அரசாங்கத்தில் ஊழலை குறைக்காத வரையில், முடிவு எடுப்பதில் நமது அதிகாரத்துவத்தின் தாமத்தை குறைக்காத வரை, நம்மால் அபரிதமான முன்னேற்றம் அடைந்த நாடுகளுடன் போட்டியிட முடியாது.

எனவே வேண்டுகோள் என்னவென்றால், இது எனது நாடு, வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய விரும்புகிறேன் என்று நமது இளைஞர்கள் கூற வேண்டும். உங்களுக்கு தெரியும், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனியர்களும், ஜப்பானியர்களும் இதைத்தான் செய்தார்கள்.
ஒவ்வொரு ஜெர்மனியரும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு கூடுதலாக சில மணி நேரம் வேலை செய்வதை உறுதி செய்தனர் என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது. மேலும், நாராயண மூர்த்தியின் கருத்துக்கு பல முன்னணி நிறுவனங்களின சி.இ.ஓ.க்கள் முதல் மருத்துவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இந்திய தொழிலாளர்களை காவு வாங்கும் செயலில் நாராயண மூர்த்தி ஈடுபட வேண்டாம். வேலை செய்பவர்களை அடிமைகள் என நினைக்கிறாா் போல, இந்த நவீன காலத்தில் மீண்டும் அடிமை முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்.
12 மணி நேரம் வேலை செய்தால் மனதளவிலும், உடலளவிலும் பலவீனம் அடைந்து விடுவோம். பிறகு சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைகளில் தான் செலவிட வேண்டும் என பலரும் எதிர் கருத்து தெரிவித்தனர்.
அதேசமயம் ஜே.எஸ்.டபுள்யூ நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, டெக் மகிந்திரா நிறுவனத்தின் சி.இ.ஓ. குர்னானி உள்பட பல நிறுவனங்களின் செயல் நிர்வாகிகள் நாராயண மூர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நாராயண மூர்த்தி 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் கூறியதை தாங்கள் தாக்கப்பட்டதாக நினைக்கக்கூடாது என்றும் அப்படி நினைப்பவர்களுக்கு மனநல சிகிச்சை தேவை என்று அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை குறிப்பிட்டு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வினோத் கோஸ்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வினோத் கோஸ்லா எக்ஸில், தாக்குதலை உணர்ந்த மக்களுக்கு மனநல சிகிச்சை தேவை. அவர்கள் கடினமாக உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் தாக்கப்படுவதாக உணரக்கூடாது. நீங்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டாம் சரி, வேலை செய்ய தயாராக இல்லை என்றால் நீங்கள் அதன் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.
அவர் வாழ்க்கையில் லட்சியம் கொண்ட இளைஞர்களிடம் பேசுகிறார் ஆனால் வெவ்வேறு வாய்ப்புகளுடன் வாழ வேறு வழிகள் உள்ளன என்று பதிவு செய்து இருந்தார். இவரது கருத்துக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications