இந்திய மீடியா துறையில் முன்னணி நிறுவனமாகவும், தென்னிந்தியாவில் டிவி பிராட்காஸ்டிங் பிரிவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருக்கும் சன் டிவி பங்குகள் கடந்த 3 மாதத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறன் சொத்து மதிப்பு தடாலடியாக உயர்ந்துள்ளது.
சன் டிவி பங்குகள் சமீபத்தில் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருவது மட்டும் அல்லாமல் சன் டிவி நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 3 மாதத்தில் 40 சதவீத உயர்வின் மூலம் புதிய உயர்வு எட்டியது வெறும் துவக்கமாகவே பார்க்கப்படுகிறது.

சந்தை முதலீட்டு வல்லுனர்கள் சன் டிவி பங்குகள் 680 ரூபாய் வரையில் அடுத்த 3-4 வாரத்தில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. சன் டிவி பங்குகள் ஜூலை 5 ஆம் தேதி 443 ரூபாயாக இருந்த நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி 634 ரூபாய் வரையில் உயர்ந்து 3 மாதத்தில் 40 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சன் டிவி பங்குகள் 1.07 சதவீதம் உயர்ந்து 617.05 ரூபாயாக உள்ளது. 5 ரூபாய் முகமதிப்பு கொண்ட சன் டிவி பங்குகள் 13.52 என்ற PE Ratio உடன் சுமார் 24,315.02 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் அசத்தி வருகிறது. தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் டிவி பிராட்காஸ்டிங் துறையில் முன்னோடியாக உள்ளது.
சன் டிவி பங்கு உரிமையாளர்களை பார்க்கும் போது பல வருடங்களாக சுமார் 75 சதவீத பங்குகளை இந்நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் மட்டுமே வைத்துள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் 75 சதவீதம் ப்ரோமோட்டர்களுக்கு சொந்தமானதாக உள்ளது, சன் டிவி குழுமத்தின் ப்ரோமோட்டர்களாக இருப்பது கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பம் தான்.
இதன் மூலம் சன் டிவி குழுமத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குனர், ப்ரோமோட்டரான கலாநிதி மாறன் சுமார் 2.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் 1031 இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications