இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி ஹப் ஆக மாறி வரும் வேளையில், உலகின் முன்னணி பிராண்டுகள் அனைத்தும் இந்தியாவில் பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ கட்டாயம் சப்ளை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் தயாரிப்பிலும் அடித்தளம் அமைத்தது தமிழ்நாடு என்றால் மிகையில்லை. குறிப்பாகப் பாக்ஸ்கான் வருகை மூலம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதிக்கும் வழிவகுத்தது.

இதன் பின்பு தான் சீன பிராண்டுகளைத் தாண்டி சாம்சங், ஆப்பிள் போன்றவை இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை உருவாக்கி இன்று வரையில் வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் புதிய வரவாக அமெரிக்க நிறுவனமான கூகுள் இந்தியாவில் தனது பிக்சல் ஸ்மார்ட்போனை தயாரித்து அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம். இந்தியாவில் கூகுள் ஏற்கனவே தனது குரோம்புக் லேப்டாப்-களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கூகுள் தனது சப்ளையர்களுக்கு அடுத்தக் காலாண்டுக்குள் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பணிகள் துவங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே பிக்சல் 8 போன்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்தக் காலாண்டுக்குள் உற்பத்தியை துவங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தில் இந்திய பிரதமர் அலுவலகம் மற்றும் ஐடி துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவா ஆகியோருக்கு நன்றி எனச் சுந்தர் பிச்சை 2023 அக்டோபர் 19 ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆப்பிள் போல் கூகுள் நிறுவனமும் தனது உற்பத்தி சப்ளை செயினைச் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றி வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் சப்ளையர்கள் வரும் வாரங்களில் அதன் உயர்தர மாடலான பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கான தயாரிப்புத் தளத்தை நிறுவி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதன் உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று தெரிகிறது. கூகுள் இந்தியாவில் எவ்வளவு போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என்றோ, அந்தப் போன்கள் நாட்டில் விற்பனைக்கு வருமா அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுமா என்பது பற்றி தெரியவில்லை.


Click it and Unblock the Notifications