சுந்தர் பிச்சை என்று அறியப்படும் சுந்தர் சுந்தரராஜன் ஜூன் 10, 1972 அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய அமெரிக்க வணிக நிர்வாகி ஆவார். இவர் ஆல்பாபெட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். சுந்தர் பிச்சை இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். சமீபத்தில் வெளியான ஆல்பாபெட் (Alphabet) நிறுவனத்தின் ப்ராக்ஸி அறிக்கையில், சுந்தர் பிச்சை 2024-ஆம் ஆண்டில் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
சம்பள விவரம்: 2024-ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை பெற்ற மொத்த சம்பளம் 10.73 மில்லியன் டாலர் (அதாவது சுமார் ரூ.89 கோடி) ஆகும். இது கடந்த 2023-ஆம் ஆண்டில் பெற்ற 8.8 மில்லியன் டாலர் (சுமார் ரூ.73 கோடி) சம்பளத்துடன் ஒப்பிட்டால் சிறிய உயர்வாகும். இந்த தொகையின் பெரும் பகுதி பங்கு விருதுகள் மற்றும் பிற இழப்பீடுகள் (compensations) ஆகும். அவரின் அடிப்படை சம்பளம் மட்டும் 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.16.5 கோடி) ஆகும்.

பாதுகாப்புக்காக செலவழிக்கப்பட்ட தொகை: சுந்தர் பிச்சையை பாதுகாக்க மட்டும் ஆல்பாபெட் நிறுவனம் 8.27 மில்லியன் டாலர்(சுமார் ரூ.69 கோடி) செலவிட்டுள்ளது. இதில் வீட்டு பாதுகாப்பு, பயண பாதுகாப்பு, தனிப்பட்ட ஓட்டுநர் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும். இந்த செலவு அவர் தனிப்பட்ட நன்மைக்காக அல்ல. அவரின் பதவியால் ஏற்பட்ட அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்பாகவே செய்யப்பட்டது என ஆல்பாபெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 2023-இல் இந்த பாதுகாப்பு செலவு 6.78 மில்லியன் டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால் இது 22% அதிகரித்துள்ளது.
2022-இல் சுந்தர் பிச்சையின் சம்பளம் 226 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,880 கோடி) ஆக இருந்தது. இது பெரும்பாலும் அவரது செயல்திறன் அடிப்படையில் வழங்கப்பட்ட பங்கு மானியங்களால் ஏற்பட்ட உயர்வாகும். ஆனால் அந்த ஆண்டு ஆல்பாபெட் நிறுவனத்தில் பல பணி நீக்கங்கள் (layoffs) நடைபெற்றதாலும், அந்த சம்பள தொகை விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
2024-இல்ஆல்பாபெட் நிறுவனத்தில் ஒரு முழுநேர ஊழியர் சராசரியாக 331,894 டாலர் சம்பாதித்துள்ளார். இது 2023-இல் இருந்ததைவிட 5% அதிகம். ஆனால் சுந்தர் பிச்சையின் சம்பளத்துடன் ஒப்பிட்டால், அது 32 மடங்கு குறைவாக இருக்கிறது.
சுந்தர் பிச்சை மிகப்பெரிய பொறுப்புடன் கூடிய பதவியில் இருக்கிறார். AI வளர்ச்சி, பாதுகாப்பு ஒழுங்குமுறைகள், கிளவுட் சேவைகளின் விரிவாக்கம் போன்ற முக்கிய நடவடிக்கைகள் அவரின் வழிகாட்டுதலால் நடக்கின்றன. ஆனால், தலைமை நிர்வாகிகளுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் உள்ள சம்பள வேறுபாடு மீண்டும் ஒரு முறையாக பேசப்படும் விவாதமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications