பிரக்யராஜில் நடைபெறும் மகா கும்பமேளா என்ற ஆன்மீக ஒன்றுகூடலில் கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த பிரம்மாண்ட நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற தலைவர்களும், தொழில்நுட்ப ஜாம்பவான்களும் கலந்து கொண்டால் எப்படி இருக்கும்? என்பதை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளனர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் CEO எலான் மஸ்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் CEO சுந்தர் பிச்சை மற்றும் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி பங்கேற்பது போன்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானதிலிருந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதில் யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஒரு வண்டியை இழுப்பது போன்றும், முகேஷ் அம்பானி ஒரு ஜியோ ஸ்டாலின் தோன்றுவது போன்றும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகளாவிய வணிக மற்றும் அரசியல் தலைவர்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொண்ட மற்றொரு AI வீடியோ இணையத்தில் பிரபலமானது.

உலகின் மிகப்பெரிய மத விழாவாகக் கருதப்படும் மஹாகும்பமேளா, உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் பல இந்தியப் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது போன்ற பிரபலங்கள் அரிதாகவே தென்பட்டனர்.
இதற்கு முன்னர் பகிரப்பட்ட வீடியோக்களில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெசி ஆகியோர் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவது போன்ற காட்சி இடம் பெற்றது. கூடுதலாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் வில் ஸ்மித், ஜெண்டயா மற்றும் டாம் ஹாலண்ட் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும் இடம்பெறுவது போன்ற காட்சி வெளியானது.
"Artificial Budhi" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு 5.7 மில்லியனுக்கும் அதிகமான வீயூஸ்களைப் பெற்றது. பல பார்வையாளர்கள் எதார்த்தமான காட்சிகளை பார்த்து பிரமித்தனர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் சிலவற்றுக்கு உதவினாலும் உண்மைக்கு மாறான விஷயங்களை உருவாக்க உதவுவது குறித்து சிலர் கவலையும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications