உலகின் முன்னணி டெக் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான அல்பபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுள், தனது ஊழியர் எண்ணிக்கையில் கணிசமான குறைக்க முடிவு செய்து முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒருப்பக்கம் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளது என முதலீட்டாளர்கள் கூவி வரும் வேளையில், டிரம்ப் பணவீக்கம் குறைந்துவிட்டு, அமெரிக்கா மீண்டும் ஆதிக்க நிலையை அடையப் போகிறது என கூறிவருகிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையில் சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனத்தில், கூகுள் பிளார்ட்பார்ம்ஸ் மற்றும் டிவைஸ் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களுள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வியாழக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று "தி இன்ஃபர்மேஷன்" என்ற செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை, இந்த பணிநீக்கம் குறித்து நேரடியாக அறிந்த ஒரு நபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பிரிவு, கூகுளின் முக்கிய தயாரிப்புகளான ஆண்ட்ராய்டு இயங்குதளம், பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் குரோம் இணைய பிரவுசர் ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்குப் பொறுப்பு வகிக்கும் முக்கிய பிரிவாகும்.
இந்த பணிநீக்கம், நிறுவனத்தின் வன்பொருள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டுத் துறைகளில் நிதி ஒதுக்கீடு அல்லது எதிர்கால திட்டத்தில் முக்கியமான மாற்றத்தை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, டெக் துறையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ரெசிஷனின் துவக்கப் புள்ளி தான் இதுவா என்ற கேள்வியும் முன் வைக்கின்றனர். இதேபோல் கூகுள் ஏஐ சேவைகளை அனைத்து தளத்திலும் அதிகப்படியாகப் பயன்படுத்தி வரும் வேளையில் இந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அதன் ஊழியர் கொள்கைகள் குறித்து பலரும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என ஒரு தரப்பினரும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்ப ஊழியர்களை மறுசீரமைக்கும் நடவடிக்கையாகவும் இது இருக்கலாம் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால் கூகுள் நிர்வாகம் இந்த பணிநீக்கம் குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை, இதேபோல் இதற்கான காரணத்தையும் வெளியிடவில்லை.
எது எப்படி இருந்தாலும், கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் பணிநீக்கம் தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை மற்ற நிறுவனங்களும் பின்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications