மகாராஷ்டிரா மாநில அரசியலில் அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை, அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதலமைச்சர் பதவியேற்று நிரப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் இப்போது பாஜக-வின் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர். அஜித் பவார் விமான விபத்தில் மறைந்த நிலையில் இன்று சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அஜித் பவார் மகாராஷ்டிராவில் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தது மட்டும் அல்லாமல் என்சிபி கட்சியின் முக்கிய தலைவராகவும், துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்தார். ஜனவரி 28ஆம் தேதி ஜில்லா பரிஷத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு விமான பயணம் மேற்கொண்ட நிலையில் தரையிருக்கும்போது விமான விபத்துக்குள்ளாகி அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதன் மூலம் இன்று மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக சுனேத்ரா பவார் பதவியேற்று வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளார். ஜனவரி 31, 2026 சனிக்கிழமை மும்பையில் உள்ள விதான் சபாவில் நடந்த சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அவர் என்சிபி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில் துணை முதலமைச்சராக பதவியேற்பு விழா நடைபெற்றது.
சுனேத்ரா பவார் 1963ஆம் ஆண்டு தராஷிவ் மாவட்டத்தில் மராத்தா குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே அரசியல் சூழலில் வளர்ந்தார். அவரது தந்தை பாஜிராவ் பாட்டில் உள்ளூர் அரசியல்வாதியாக இருந்தார். 1980களில் அவரது சகோதரர் பதம்சிங் பாஜிராவ் பாட்டில் மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்கு பெற்றார். சுனேத்ரா பவார் 1983இல் ஆரங்காபாத்தில் உள்ள எஸ்.பி.ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியில் வணிக இளங்கலைப் பட்டம் பெற்றார். 1985 டிசம்பரில் அஜித் பவாரை திருமணம் செய்து கொண்டார்.
சுனேத்ரா பவாரின் நிதி நிலை குறித்து 2024 லோக்சபா தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் 2022-23 நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் ரூ.4,22,21,010 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமதி அக்ரோ லிமிடெட், வெங்கீஸ் (இந்தியா) லிமிடெட் போன்ற நிறுவனங்களில் பங்குகள் மற்றும் பத்திரங்கள் அவரிடம் உள்ளன. இவை அவரது கணவர் அஜித் பவாருடன் இணைந்து நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடையவை.
அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த பிறகு, சுனேத்ரா பவார் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளார். அவரது பதவியேற்பு மகாராஷ்டிரா அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் சிக்னலாக பார்க்கப்படுகிறது. என்சிபி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அவர், கட்சியின் எதிர்கால திட்டங்களை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications