ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய பகுதிகளில் எபோலா வைரஸ் நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO) சர்வதேச அளவில் கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலை (PHEIC) என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனவே பல்வேறு நாடுகளும் விமான நிலையங்களிலேயே எபோலா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்தியாவில் அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எபோலா நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் சர்வதேச விமானப் போக்குவரத்து வசதி இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் இந்நோய் பரவுவதைத் தடுக்க திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரத்யேகமாக 10 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு வார்டு உடனடியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னை, கோவை மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையங்களில் கடந்த சனிக்கிழமை முதல் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை மையம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
உகாண்டா, தெற்கு சூடான் மற்றும் காங்கோ குடியரசு போன்ற எபோலா பாதிப்பு அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிப்பதற்காக, நான்கு தகுதி வாய்ந்த மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழு இந்த மையத்தில் பணியில் உள்ளனர். இதற்கிடையே உகாண்டாவில் இருந்து பெங்களூரு வந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
28 வயதான பெண் ஒருவர் அண்மையில் உகாண்டா நாட்டிற்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் மற்றும் பெங்களூருக்கும் வருகை தந்திருக்கிறார். அவர் வருகை தந்த 24 மணி நேரத்தில் உடல் வலி இருப்பதாக கூறி இருக்கிறார். எனவே அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் பிரத்தியேக வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். விமான நிலையத்தில் பரிசோதனை செய்யும்போது அவருக்கு எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை.
இந்த சூழலில் அவர் உகாண்டவிலிருந்து பயணம் செய்திருந்ததால் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தி உடல்நிலை கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் அவர் தனக்கு லேசான உடல் வலி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து அவருக்கு எபோலா டெஸ்ட் எடுத்து புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாவட்ட தலைமை மருத்துவர் அணில் குமார் பனாகர் தெரிவிக்கிறார்.
இரண்டு நாட்களில் இந்த முடிவுகள் வந்துவிடும் என்றும் முடிவுகளில் நெகட்டிவ் என வந்தாலும் மேலும் 48 மணி நேரத்திற்கு அவர் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் ஒரு டெஸ்ட் எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இரண்டாவது டெஸ்டிலும் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
எபோலா என்பது ஒரு வகை வைரஸ். இது மனிதர்களுக்கு பரவும் போது, கடுமையான காய்ச்சல், தீவிர உடல் சோர்வு மற்றும் பலவீனம், தசை வலி மற்றும் கடுமையான தலைவலி, தொண்டை வறட்சி அல்லது தொண்டை புண் ஆகியவை தென்படும். உடனே பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை தந்தால் அவர் உயிர் பிழைப்பார், இல்லை என்றால் கஷ்டம் தான்.


Click it and Unblock the Notifications

