சென்னை: ஐடி மற்றும் பிபிஓ சேவைகளை வழங்கி வரக்கூடிய உலகின் முன்னணி நிறுவனமான சதர்லேண்ட் (Sutherland) சென்னையில் இருக்கும் தங்களுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்து கூடுதலாக 1000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சதர்லேண்ட் என்பது கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் மற்றும் பிபிஓ சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 32 மொழிகளில் சேவை வழங்கி வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் நீடித்து வருகிறது.

ஐடி மற்றும் பிபிஓ சேவைகளை மட்டுமே வழங்கி வந்த இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் ,கிளவுட் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் எல்லாம் தற்போது சேவையை விரிவாக்கம் செய்திருக்கிறது. 1986 ஆம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்டு தற்போது சர்வதேச நிறுவனமாக விரிவடைந்து இருக்கிறது.
உலகம் முழுவதும் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட அலுவலகங்களோடு 144 க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் சேவையாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தை பொருத்தவரை இதன் கார்ப்பரேட் அலுவலகம் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்திருக்கிறது.
இந்தியாவில் பெங்களூரு, சென்னை ,கொச்சின், ஹைதராபாத், மும்பை, போபால் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் சதர்லேண்ட் தன்னுடைய அலுவலகத்தை நிறுவி செயல்படுத்தி வருகிறது. சென்னையில் பெருங்களத்தூர் பகுதியில் சதர் லாண்டுக்கு சொந்தமான கேட்வே என பெயரிடப்பட்ட மிகப்பெரிய அலுவலகம் அமைந்திருக்கிறது.
தற்போது இந்த அலுவலகத்தை தான் தாங்கள் விரிவாக்கம் செய்யப் போவதாக சதர்லேண்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது, சென்னை அப்டேட்ஸ் என்ற எக்ஸ் தள பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி சென்னையில் இருக்கும் தங்களுடைய அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கூடுதலாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என சதர்லாண்ட் நிறுவனம் கூறி இருக்கிறது.
இந்தியாவில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்படுவதில் சென்னை முன்னணி இடத்தில் இருக்கிறது. அதாவது பெரிய நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை இங்கே நிறுவ முன் வருவதே இதற்கு காரணம். திறமையான மனித வளம், கட்டமைப்பு கிடைப்பதும் இந்த நிறுவனங்கள் சென்னையை நோக்கி வர காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications