இந்திய கார் பிரியர்கள் மத்தியில் எப்போதும் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு தனி இடம் உண்டு, சினிமா நடிகர் அஜித் முதல் பட்ஜெட் விலையில் குடும்பத்திற்காக கார் வாங்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு சாமானிய மக்களுக்கு மாருதி ஸ்விஃப்ட் முக்கிய தேர்வாக உள்ளது.
SUV கார் டிரெண்டிங் மத்தியில் ஆட்டத்தை மாற்ற திட்டமிட்டு களமிறக்கப்படும், ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த மாருதி சுசூகி எபிக் ஸ்விஃப்ட் 2024 கார் இன்று இந்தியாவில் துவக்க விலையாக ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை வடிவமைத்து உருவாக்க மாருதி சுசூகி சுமார் ரூ.1,450 கோடி முதலீடு செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது முக்கியமான தகவலாகப் பார்க்கப்படுகிறது. இந்த பெரும் முதலீட்டுக்கு முக்கிய காரணம் மாருதி சுசூகி நிறுவனத்தில் பெரும் பகுதி வர்த்தகம் இன்னும் ஹேட்ச்பேக் பிரிவிலேயே உள்ளது.
அனைத்தையும் விட முக்கியமாக மாருதி சுசூகி நிறுவனம் புதிய எபிக் ஸ்விஃப்ட் 2024 காரை பயன்படுத்த முழு மாத சந்தா திட்டத்தின் கீழ் (subscription) அளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மாதாந்திர அடிப்படையிலும் இந்த கார் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்க உள்ளது மாருதி சுசூகி.
எபிக் ஸ்விஃப்ட் 2024 கார் சுமார் ஒன்பது வண்ணங்களிலும், ஆட்டோமேட்டிக் மற்றும் மானுவல் என இரண்டு வகையான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் இந்த கார் கிடைக்கும். புதிய அப்டேட் செய்யப்பட்ட வேரியண்ட் மாடல்கள், மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 10% அதிக எரிபொருள் திறன்மிக்கதாக உள்ளது. இதேபோல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 14% அதிக எரிபொருள் திறன்மிக்கதாக உள்ளது என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில், ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் உலகளவில் 169 நாடுகளில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிர்ணயிக்கப்பட்டு இன்று அறிமுகம் செய்துள்ளது. மேலும், மாத சந்தா திட்டத்தின் கீழ் ரூ.17,436 என்ற மாத கட்டணத்தில் இந்த காரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சந்தா கட்டணத்தில் வாகனப் பதிவு, பராமரிப்பு, காப்பீடு மற்றும் அவசர கால சாலை உதவி ஆகியவை அடங்கும்.
எபிக் ஸ்விஃப்ட் 2024 காரில் புதிய 1.2L Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் இருக்கும் வேளையில் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 24.8 கி.மீ./லி (kmpl) மைலேஜ்-ம், ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 24.75 கி.மீ./லி (kmpl) மைலேஜ்-ம் அளிக்கிறது.
2024 ஸ்விஃப்ட்டில் உள்ள புதிய 1.2 லிட்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் மாருதி சுஸூகி நிறுவனம் 12% குறைவான உமிழ்வைக் கொண்டு உள்ளது. புதிய கார் வாங்க முடியாதவர்கள் மாதம் 17000 ரூபாய் விலையில் இக்காரை பயன்படுத்த முடியும், இதேபோல் தினசரி பயன்பாடு, டிராபிக் நிறைந்த சாலையில் பயன்படுத்துவோருக்கு புதிய எபிக் ஸ்விஃப்ட் 2024 சிறந்த தேர்வாக இருக்கும்.
எபிக் ஸ்விஃப்ட் 2024 கார் தற்போது சந்தையில் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுடன் போட்டிப்போட்டு வருகிறது. இதேபோல் இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications