இந்தியாவில் உணவு டெலிவரி துறையில் ஸ்விக்கியும் சோமாட்டோவும் முன்னணியில் உள்ளன. முன்பெல்லாம் எப்போதாவது ஹோட்டல்களில் ஆர்டர் செய்து உணவு சாப்பிடும் வழக்கம் இப்போது மாறிவிட்டது. கிட்டத்தட்ட மூன்று வேளையும் தினசரி ஹோட்டல்களில் ஆர்டர் செய்து உணவு சாப்பிடும் நபர்கள் இப்போது ஆயிரக்கணக்கில் உள்ளனர். தினந்தோறும் ஸ்விக்கி, சோமாட்டோவுக்கு லட்சக்கணக்கான உணவு ஆர்டர்கள் வந்து குவிகின்றன.
அடிக்கடி இந்த நிறுவனங்கள் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள் இந்த நிறுவனங்களின் டெலிவரி மற்றும் பிற கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதை அறிந்துள்ளனர். டெலிவரி கட்டணம், சர்வீஸ் கட்டணம், பேக்கேஜிங் கட்டணம் என மொத்த பில்லில் இந்தக் கட்டணங்களே 20 சதவீதத்தைப் பிடித்து விடுகின்றன.
தொடக்கத்தில் சேவை கட்டணம் குறைவாக இருந்தது. ஆனால் படிப்படியாக இப்போது அவை அதிகரித்து விட்டன என்று பெங்களூரை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று இலவசம் போன்ற கவர்ச்சிகரமான சலுகை ஆபர்கள், டிஸ்கவுன்ட்களால் உணவு டெலிவரிகள் தாறுமாறாக அதிகரிக்கின்றன.
2023இல் சோமாட்டோவின் ஆய்வில் இந்தியாவில் இரவு 8 மணி முதல் 11 மணிவரையில் செய்யப்படும் ஆர்டர்கள் அன்றைய தினத்தில் 25 சதவீதத்தைப் பிடிக்கின்றன எனத் தெரிய வந்துள்ளது.
பொழுதுபோகாதவர்கள் இதில் நிறைய உணவு ஆர்டர்களை செய்வதாகவும் கூறப்படுகிறது. புஷ் நோட்டிபிகேஷன்கள், லிமிட்டடு டைம் ஆபர்கள், கஸ்டமைஸ்டு ரெகமண்டேஷன்கள் போன்றவற்றால் அதிக ஆர்டர்களை ஸ்விக்கியும் சோமாட்டோவும் பெறுகின்றன.
இந்த வெட்டிச் செலவைத் தவிர்க்க வேண்டுமென்றால் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உணவுக்காக ஒதுக்க வேண்டும் என்று திருச்சி என்ஐடி பரிந்துரைக்கிறது. இதனிடையே ஸ்விக்கியும் சோமாட்டோவும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் உணவு ஆர்டர்களுக்கு பிளாட்ஃபார்ம் கட்டணம் வேறு வசூலிக்கின்றன.
கடந்த 2023இல் ஸ்விக்கி முதன் முதலாக இந்த பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அறிமுகம் செய்தது. ரூ.2இல் தொடங்கிய இந்தக் கட்டணம் இப்போது ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.6 வசூலிக்கப்படுகிறது. ஸ்விக்கியை் தொடர்ந்து சோமாட்டோவும் உணவு டெலிவரிகளுக்கு இந்த பிளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியது.
இந்தக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு மாதங்களில் மட்டும் சோமாட்டோ பிளாட்ஃபார்ம் கட்டணமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் உணவு டெலிவரிகளுக்கு ரூ.83 கோடியை வசூலித்துள்ளது. பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்திய ஓராண்டுக்குள் ஸ்விக்கியும் சோமாட்டோவும் அதனை இருபது சதவீதம் அதிகரித்து விட்டது.
உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை என்பது தான் உண்மை. சிறிது சிறிதாக பிளாட்ஃபார்ம் கட்டணத்தை நிர்ணயித்து அதன் மூலம் கோடிக்கணக்கில் லாபத்தை இந்த உணவு டெலிவரி நிறுவனங்கள் பெறுகின்றன.


Click it and Unblock the Notifications