கொரோனாவால் உலகமே முடங்கியுள்ள நிலையில் பல நிறுவனங்கள் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் பொருளாதாரமும் கூடவே முடங்கி வருகிறது. இதனால் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க ஆள்குறைப்பு அஸ்திரத்தினை கையில் எடுத்து வருகின்றன.
ஆக உணவகங்களை நம்பியுள்ள ஸ்விக்கி சோமேட்டோ மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சோமேட்டோ நிறுவனம் தனது ஊழியர்களின் மொத்த விகிதத்தில் 13% பேரை பணி நீக்கம் செய்தது.
ஆள்குறைப்பு நடவடிக்கை
இந்த நிலையில் தற்போது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தனது ஊழியர்களில் 1,100 பேர் வேலையிலிருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது அதன் மொத்த ஊழியர்கள் விகிதத்தில் 14 சதவீதம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துரதிஷ்டவசமாக இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்.
இது ஸ்விக்கி மோசமான நாள்
ஸ்விக்கிக்கு இது மோசமான நாட்களில் ஒன்று எனவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் உணவு டெலிவரியில் முக்கிய பங்கு வகித்து வரும் சோமேட்டோ நிறுவனம் தனது ஊழியர்களில் பலரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்தே ஸ்விக்கி நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
சில கிளைகள் மூடல்
ஸ்விக்கி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 8000 ஊழியர்களைக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 1,100 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் மூன்று மாத சம்பளம் கிடைக்கும் என்றும் ஸ்விக்கி அறிவித்துள்ளது. இது தவிர ஸ்விக்கி தற்போது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சமையலறைகளில் பலவற்றை ஏற்கனவே மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது.
செலவினைக் குறைக்க திட்டம்
இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி இரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நெருக்கடியான இந்த தருணத்தில் மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க செலவினங்களை குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது எனவும் மஜெட்டி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 96 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில் லாக்டவுன் நடவடிக்கை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டெலிவரி வர்த்தகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள டெலிவரி நிறுவனங்கள் மோசமான நிலையை சந்தித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications