இந்தியாவில் உணவு டெலிவரி பிரிவில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
உணவு டெலிவரி மட்டுமில்லாமல் ஸ்விக்கி நிறுவனம் இன்ஸ்டாமார்ட் என்ற பெயரில் குயிக் காமர்ஸ் சேவையும் வழங்குகிறது. அதற்கு போட்டியாக சோமேட்டோ நிறுவனம் குயிக் காமர்ஸ் பிரிவில் இயங்கி வரும் பிளிங்கிட்டை கையகப்படுத்தியது. இந்த பிரிவில் தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள இரு நிறுவனங்களும் கடுமையான போட்டியில் இருக்கின்றன, வாடிக்கையாளர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் சீன்ஸ் என்ற ஒரு புதிய வசதியை தங்களுடைய செயலியில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஸ்விக்கி செயலி வாயிலாக பல்வேறு இடங்களில் நடக்கும் லைவ் மியூசிக் மற்றும் பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ள முடியும்.
டைன் அவுட் என்ற பிரிவில் சீன்ஸ் என்ற ஒரு ஆப்ஷனை இந்த நிறுவனம் தற்போது சேர்த்துள்ளது. இதில் ஸ்விக்கியோடு பார்ட்னராக இருக்கும் ரெஸ்டாரண்டுகளில் நடக்கக்கூடிய லைவ் மியூசிக் பார்ட்டி மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு எளிதாக ஒருவர் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.
தற்போதைக்கு இந்த சீன்ஸ் வசதியானது டெல்லி , பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் தங்களுடைய செயலியை இதற்காக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஸ்விக்கி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
டெல்லியை பொறுத்தவரை புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பார்ட்டி மற்றும் பிற லைவ் மியூசிக் ஷோக்கள் என வாடிக்கையாளர்கள் 55 நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் புக் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 48 நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் புக் செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்விக்கி நிறுவனம் தங்களுடைய டைன் அவுட் என்ற பிரிவின் கீழ் புக் மை ஷோ நிறுவனத்தோடு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்க வசதியை ஏற்படுத்தி தந்திருந்து. தற்போது அதனை சற்றே மாற்றி அமைத்துள்ளது.
அண்மையில் தான் சோமேட்டோ நிறுவனம் தங்களுடைய டிக்கெட் தளமான டிஸ்ட்ரிக் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த டிஸ்ட்ரிக்ட் என்ற செயலி வாயிலாக நாம் எளிமையாக பல்வேறு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், உணவகங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications